Published : 02 Nov 2018 03:45 PM
Last Updated : 02 Nov 2018 03:45 PM

5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலால் பாதிப்பு: 17 மணிநேரமாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனை; சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு 17 மணிநேரமாகியும் முதலுதவி சிகிச்சை அளிக்காத திருப்பூர் மருத்துவமனையைக் கண்டித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் தம்பதியருக்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். தீபாவளி பண்டிகைக்கான உற்பத்தியை பின்னலாடை நிறுவனங்கள் தயார் செய்ய வேண்டியிருப்பதால், இரவு பகலாக பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தம்பதியரின் கணவர் கடந்த அக். 31-ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்போது மனைவி இரவு நேரத்தில் பணியாற்ற பின்னலாடை நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் அவர் வீடு திரும்புவார் என்பதால் வீட்டின் கதவைப் பூட்டாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் மேற்கண்ட பகுதியில் நள்ளிரவில் மழை பெய்துள்ளது. அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டுள்ளது. செப். 1-ம் தேதி அதிகாலை வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் இளைய மகளின் வாயைப் பொத்தி, கைகளைக் கட்டி மொட்டை மாடிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றிருக்கிரார். அப்போது அந்த மர்ம நபர் அந்த ஐந்து வயது  சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது குழந்தை அழ, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், மின்சாரம் இல்லாததால் குழந்தை அழுவதாக நினைத்துள்ளனர். மர்ம நபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பிறகு ஓட்டம் பிடித்தார். மாடியில் இருந்து கீழே சிறுமி வந்தபோது, நடக்க முடியாமல் கீழே விழுந்து அடிபட்டார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர்.

சாலை மறியல்

இந்நிலையில் சிறுமியிடம் மர்ம நபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்தார் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்க காலை 4. 30 மணிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் இரவு 9 வரை உரிய சிகிச்சை அளிக்காததால், சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து சிறுமியின் குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசு மருத்துவர் மீது நடவடிக்கை?

மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறுகையில், ''சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அரசு தலைமை மருத்துவமனையில் அதிகாலை 4 மணிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையிலும் இரவு 9 வரை சிகிச்சை அளிக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்ட மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x