Published : 26 Nov 2018 09:05 AM
Last Updated : 26 Nov 2018 09:05 AM

18 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்; புயல் பாதித்த பகுதிகளில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை 

புயல் பாதித்த மாவட்டங்களில் 3 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதுவரை 6,059 மருத்துவ முகாம்களின் மூலம் 3 லட்சத்து 94 ஆயிரத்து 995 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலம் 340 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் 68,234 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 2,127 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய் யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 312 இந்திய முறை மருத்துவ முகாம்கள் அமைக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகாம்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இதுவரை 17 லட்சத்து 95 ஆயிரத்து 572 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்கள், தொற்று நோய் தடுப்பு குழுக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிளீச்சிங் பவுடர் பொட்டலங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இப்பொட்டலங்களை பொது மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x