Last Updated : 27 Nov, 2018 11:15 AM

 

Published : 27 Nov 2018 11:15 AM
Last Updated : 27 Nov 2018 11:15 AM

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மத்திய குழு புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு

'கஜா' புயலில் மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதில் அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என மத்திய குழு புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி வீசிய 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதிகளை மத்திய குழு கடந்த 24-ம் தேதி முதல் நேரில் சென்று ஆய்வு செய்தது.

திங்கள்கிழமை மாலை புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலை ஆய்வு செய்த மத்திய குழு, இரவு புதுச்சேரி வந்தது.

இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தலைமைச்செயலகத்தில் மத்திய குழுவினருடன் புதுச்சேரி அரசு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து  தலைமைச் செயலகத்தில்  முதல்வர் நாராயணசாமி தலைமையிலான கூட்டத்தில்  ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, தலைமைச் செயலர் அஸ்வினி குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

'கஜா' புயல்  ஆய்வுக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் நிதித்துறை சார்பில் செலவின ஆலோசகர் ஆர்.பி.கவுல்,வேளாண் துறை சார்பில் பி.கே.ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாணிக் சந்த்ரா பண்டிட், மின்துறை சார்பில் வந்தனா சிங்கால், நீர்வளத்துறை சார்பில் ஹர்ஷா, நெடுஞ்சாலை மற்றும் சாலைப்போக்குவரத்து துறை சார்பில் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன், புயலுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு சிறப்பாக செய்துள்ளதாக டேனியல் ரிச்சர்ட் பாராட்டினார். மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதில் அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது எனவும், மத்திய குழு இது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் எனவும் தெரிவித்தார்.

அடுத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, "சுனாமியால் புதுச்சேரியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனைச் சீரமைக்க பல ஆண்டுகள் ஆனது என்றும் இதனை படிப்பினையாகக் கொண்டு  புயல்  காலங்களில் பல பாதிப்புகளை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x