Published : 24 Nov 2018 03:47 PM
Last Updated : 24 Nov 2018 03:47 PM

கும்மிருட்டு கிராமங்களில் 7 நாட்களாக உணவின்றி வாடிய மக்கள்: கேட்ட முதல் கேள்வி ‘ நீங்க சாப்பிட்டீங்களா?’- தன்னார்வலரின் நெகிழ்ச்சிப் பதிவு

நிவாரண பொருட்களுடன் மிகுந்த போராட்டத்துக்கு இடையே நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் உள்ள குக்கிராமத்திற்கு சிரமப்பட்டு பயணம் செய்த தன்னார்வலர் அங்குள்ள மக்களின் விருந்தோம்பலை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தமுஎகச மாநிலக்குழு முயற்சியால் 3 டன் நிவாரணப் பொருட்களுடன் நாகையில் உள்ள குக்கிராமத்திற்கு தமுஎகச தன்னார்வலர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மிகுந்த சிரமமான பயணத்தில் தலைஞாயிறு என்னும் பகுதியில் உள்ள வாட்டாக்குடி கிராமத்திற்கு குழு ஊர்ந்தப்படி சென்று நள்ளிரவில் சேர்ந்துள்ளது.

மிகுந்த சிரமத்தினூடே அவர்கள் சென்ற பகுதியில் 7 நாட்களாக மின்சாரம், குடிநீர் இல்லை, குழந்தைகளுக்கு பால் எதுவும் இல்லாத நிலை. 40 ஆண்டுகள் பின் தங்கியது போன்று குடிசைகளை இழந்து மீண்டும் கொட்டும் மழையில் வாடிய மக்கள் தங்கள் துயரை மறைத்துக்கொண்டு நிவாரணப்பொருட்களை கொண்டுச் சென்றவர்களை பார்த்து கேட்ட முதற்கேள்வி ‘சாப்பிட்டீர்களா?’ என்பதே.

அடுத்து எங்கிருந்தோ அனைவருக்கும் கருப்பு வெல்லம் போட்ட பாலில்லாத டீ போட்டு கொடுத்துள்ளனர். இதை நெகிழ்வுடன் அவர்கள் பதிவு செய்துள்ளார் தமுஎகச மாநில நிர்வாகியான அந்த தன்னார்வலர்.

அவருடைய முகநூலில் அதை பதிவு செய்துள்ளார். அவரது முகநூல் பதிவு:

“300 குடும்பங்களுக்கு தேவையான பாய், கைலி, நைட்டி, போர்வை, துண்டு, டார்ச் லைட், ரவா, சமையல் எண்ணை, வெங்காயம், அரிசி, கொசுவத்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பால்பவுடர், பிஸ்கட், உள்ளிட்ட 15 பொருட்களுடன் தமுஎகச மாநிலக்குழு ஏற்பாட்டில் தமுஎகச தோழர்களுடன் நாகை மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

இரவு 11.30 மணி நாகையில்  தோழர்களுடன் தோழர் சத்தியசீலன் எங்களை வழிகாட்ட காத்துக்கொண்டிருந்தார். அங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ECRல் பயணித்தோம். அங்கிருந்து தலைஞாயிறு பேரூராட்சி செல்லும் பிரிவுச்சாலை பிரிந்தது.

அது குறுகிய சாலை. மூன்று டன் எடைகொண்ட பொருட்கள் வேனில் இருந்ததால், எங்கள் ஒட்டுனரால் நல்ல சாலையிலேயே 30 கிலோ மீட்டர் வேகத்திலேயே ஓட்ட முடிந்தது.

இந்தக்குறுகிய சாலை அவரால் வாகனத்தை ஆமை வேகத்திலேயே ஓட்ட முடிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, மின்விளக்கின் ஒளியே தெரியாத அந்த கும்மிருட்டில்,  வழியெங்கும் சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், முறிந்துகிடக்கும் மரங்களுக்கு இடையில், இலைகளற்று ஆங்காங்கே நிற்கும் சில மரங்கள், குடியிருப்புகள் என்ற தடத்தோடு சில இடங்கள் என்ற அந்த இரவில், வந்த தோழர்களுக்கு ஒருவித கலக்கத்தை உண்டு செய்தது.

இரவு 12.30 மணி, தலைஞாயிறு வந்தவுடன் வாட்டாக்குடி நோக்கி அழைத்துச் செல்ல இளைஞர் கூட்டம் ஒன்று  அமிர்தலிங்கம் தலைமையில் தயாராக இருந்தது. வாட்டாக்குடி கிராமத்திற்கு செல்லும் வழி  இதுவரை வந்த சாலையை விட மிகமிகக் குறுகலான சாலை, ஊரில் நுழைவாயிலில் மின்கம்பம் விழுந்துகிடக்கிறது.

எங்கள் வேன் செல்வதற்காக அந்த இரவில்  இளைஞர்கள் அதை கொஞ்சம் சரி செய்து வழி ஏற்படுத்தினர். அந்த ஊர் தேடிச்செல்லும் முதல் வாகனம் எங்களுடையது தான் என்பதை அது எங்களுக்கு உணர்த்தியது. கொஞ்சதூரம் சென்ற பிறகு வேன் ஓட்டுனர் தன்னால் வாகனத்தை ஓட்ட முடியாது என்று நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு கொஞ்ச தூரம் அந்த கிராமத்தை நோக்கி நடந்து சென்றோம். இரவு 1.30 மணிக்கு ஊருக்குள் எல்லா வீட்டு வாசலிலும் இருள்சூழ்ந்த அந்த இரவில் மக்கள் எங்கள் வருகைக்காக காத்துக் கிடந்தார்கள். அரை கிலோமீட்டருக்கு முன்பே நின்றுபோன வேனிலிருந்து அந்த மக்கள் தான் பொருட்களை இறக்கி ஊருக்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் அந்த ஊரை சுற்றி இருந்த நெல் வயல்கள், கஜா புயலின் விளைவாக உப்பு நீரால் சூழப்பட்டு இருந்தது. பெரும்பாலான வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்திருந்தது. 8 நாட்களில் விஏஓக்கூட எட்டிப்பார்க்காத அந்த கிராமத்திற்குள், இருளும் பேரமைதியும் மட்டுமே சூழ்ந்திருந்தது.

அது என்ன நாள், என்ன கிழமை என்று கூட நினைவில் இல்லை அந்த மக்களுக்கு. அவ்வளவு நெருக்கடிக்கிடையில் வாழும் அந்த மக்கள், வந்த எங்களை பார்த்து கேட்ட முதல் கேள்வி, "சாப்டீங்களா?" அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் "யார் வீட்டிலாவது ரவா இருந்தால் வந்தவங்களுக்கு உப்புமா கிண்டுங்களேன்" வந்த எங்களில் பலருக்கு கண்கள் கலங்கி, தொண்டை அடைக்க ஆரம்பித்தது.

கடும் பசியிருந்த போதும், "எதுவும் வேண்டாம்" என்று மறுத்தோம். பிடிவாதமாக டீயாவது குடிக்க வேண்டும் என்றார்கள். "பால் கூட இல்லையே, எப்படி டீ?" என்று யோசித்துக் கொண்டிருக்கையில், சற்று நேரத்தில் சூடாக பால் இல்லாத வெல்லம் போட்ட டீ வந்து சேர்ந்தது. இரவு 2.30க்கு அந்தத் தேனீர் அந்த மக்களின் பேரன்பினால் சுவை ஏறி இருந்தது.

நிவாரணப் பொருட்களை அங்குள்ள பொதுமக்கள் "வழிப்பறி" செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிலர் மீது மிகப்பெரும் ஆத்திரம் உருவாகியிருந்தது. ஏதுமற்றதாலேயே அவர்கள் வாகனங்களை மறிக்கிறார்களே தவிர, அவர்கள் ஊழல் பெருச்சாளிகளை போல உங்கள் உழைப்பை ஒன்றும் சுரண்டவில்லை. இனி எங்கும் அப்படி மிடில்கிளாஸ் மனநிலையில் பொங்காதீர்கள்.

மீண்டும் மழை தூரத்தொடங்கியது. தோழர். அமிர்தலிங்கம் அவர்களின் சிறிய ஓட்டு வீட்டிற்குள் எல்லோரும் ஒதுங்கினோம். அதுவரை நிலவொளியில் மட்டுமே இருந்த அந்த ஊரில், அப்போது தான் மெழுகுவர்த்தியை கொழுத்தினார்கள். காரணம், மெழுகுவர்த்தி பற்றாக்குறை.

நெருக்கடி எப்படியெல்லாம் மக்களை வாழக் கற்றுக்கொடுக்கிறது. தோழர் அமிர்தலிங்கம் அந்த ஊரின் முன்னாள் சேர்மேன் (2006-2011). இப்போது விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர். அவர் வீட்டில் சுமார் 700 புத்தகங்கள் இருந்தன. அவ்வளவும் மழை நனைத்திருந்தது.

அவர் வீட்டில் இடதுசாரித் தலைவர்கள் பலருடன் அவர் எடுத்திருந்த புகைப்படங்கள், கலைஞர் அவர்கள் "சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி பிரதிநிதி" என்று பாராட்டிய புகைப்படங்கள் எல்லாம் புயல் சேதப்படுத்தியிருந்தது. அங்கிருந்த "சே வாழ்வும் புரட்சியும்" என்ற ஈரமாகி மெழுகுவர்த்தி ஒளியில் தெரிந்த அந்த பெரிய நூல், "மீண்டுவருவோம்" என்று அந்த மக்கள் சொல்வதுபோல் இருந்தது.

அதிகாலை 3.30க்கு "கிளம்புகிறோம்" என்று சொல்லிவிட்டு நாங்கள் மன வேதனையோடு கிளம்புகையில், ஒரு புகைப்படமாவது பொருட்கள் கொடுப்பது போல் எடுங்கள் என்றார்கள். எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கி தயங்கி புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பினோம்.

மீண்டும் பிரதான சாலை வரை வந்து, விட்டுச்சென்றார்கள். ஒரு அமைப்பின் மாநில பொதுச்செயலாளர், அந்த ஊரின் சேர்மனாக 5 ஆண்டுகள் இருந்தவர், அந்த ஊருக்கே எட்டு நாட்கள் கழித்துத்தான் முதல் நிவாரணம் செல்கிறது என்றால், டெல்டா மாவட்டங்களின் மற்ற உள்கிராமங்களின் நிலை? யோசிக்கவே அச்சமாக இருக்கிறது.

ஒரு லட்சம் மின் கம்பங்கள் இதுவரை விழுந்துள்ளது. தமிழ்நாடு முழுக்கவே அவ்வளவு இருப்பு இல்லாத சூழலில் எப்போது மின்சாரம் வரும் என்றே அந்த மக்களுக்குத் தெரியாது. மின்சாரம் இல்லாவிட்டால் குடிநீர் தொடங்கி எந்த அத்தியாவசிய தேவையும் எப்போது சரிசெய்யப்படும் என்றும் தெரியாது.

மின்சாரம் இல்லாமல் என்ன வேலைக்கு போவது என்ற மக்களின் கவலை தமிழகத்தில் இருக்கும் மற்ற மாவட்ட மக்களுக்கு புரியவும் புரியாது. ஏதோ ஒரு நாள் நிவாரணம் கொடுத்தோம், நம் கடமை முடிந்தது என்று யாரும் திருப்தி அடையக்கூட முடியாது. இதுவரை வரும் நிவாரணப்  பகுதி வாரியாக பிரித்துக்கொடுக்கக்கூட அரசிடம் எந்த ஏற்பாடும் இல்லாமல் இருக்கிறது.

இவ்வளவு துயரோடு அந்த ஊரைவிட்டு அதிகாலை வெளியே வருகிறோம். நாங்கள் அந்தப்பகுதியை விட்டு வெளியேறுகையில் இருள் மட்டுமே சூழக்கிடக்கிறது. அந்தப்பகுதியில், இருளை கிழித்தபடி ஏக்கர்கணக்கில், மூன்று பேர் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு மனிதரின் பெரிய மாளிகை வீடுமட்டும் போலீஸ் பாதுகாப்போடு தன்னந்தனியாக நின்றது. அரசுப்பள்ளிகள் எல்லாம் நிவாரண முகாமாக இருக்கையில், அந்த பிரம்மாண்ட வீட்டின் அருகிலேயே, அந்த வீட்டுக்காரரின் பள்ளிக்கூடம் மட்டும் யாருமற்று பாதுக்காப்போடு பூட்டிக்கிடக்கிறது.

அந்த வீடும் பள்ளியும் வேறு யாருடையதும் அல்ல, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களுடையது.”

 இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத பெரும் புயல் தாக்கிய ஆயிரக்கணக்கான குக்கிராமங்களின் கதைத்தான் மேற்கண்ட பதிவு.

இன்னும் ஆயிரக்கணக்கான குக்கிராமமக்கள் இருளில், உணவின்றி, அரசின் நிவாரணம் எதுவும் சென்றடையாத நிலையில் 40 ஆண்டுகள் பின் தங்கிய இருள்சூழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதே உண்மை. எட்டு நாட்கள் கடந்த நிலையில் நிவாரணம் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்பதே வேண்டுகோள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x