Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM
ஆடி மாதம் முடிந்துள்ள நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது காற்று வீச்சு குறைந்துள்ளது. காற்றாலைகளில் மின் உற்பத்தியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் 2 மணி நேரம் அறிவிக்கப்படாமல் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலுள்ள மொத்த காற்றாலை மின் உற்பத்தியில், 40 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்தான் காற்றாலை மின் உற்பத்தி அதிகம். இம்மாவட்டங்களில் 6,163 காற்றாலைகள் உள்ளன. இவை மூலம் அதிகளவாக 3,835 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
கணவாய் பகுதியில் மிதம்
ஆரல்வாய்மொழி கணவாய் பகுதிகளில் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் காற்றுவீச்சு மிதமாக இருப்பதால் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண்டில் மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின்உற்பத்தி அதிகம் இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை மின் உற்பத்தி மிதமாக இருக்கும். மீதம் 4 மாதங்களில் மின்உற்பத்தி எதிர்பார்த்த அளவு இருக்காது.
ஆண்டுதோறும் ஆனி, ஆடி மாதத்தில் (மே – ஜூலை) காற்றாலை மின்உற்பத்தி உச்ச அளவில் இருக்கும். இந்த காலத்தில் மின்வெட்டு பிரச்சினையும் அவ்வளவாக இருக்காது.
குறைந்த காற்று
இவ்வாண்டு ஆடி முடிந்ததும் காற்று வீச்சும் குறைந்துவிட்டது. இதனால், கடந்த சில நாட்களாக மின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பகல் வேளைகளில் 2 மணிநேரத்துக்கு அறிவிக்கப்படாமல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஒருசில இடங்களில் இரவு நேரங்களில் ஒருமுனை மின்சாரம் தடைபடுகிறது.
இது தொடர்பாக மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவால் மின்தடை செய்ய வேண்டிய நிலை உருவாகியிருப்பதாக’ தெரிவித்தனர்.
சரிந்த உற்பத்தி
ஆகஸ்ட் 1-ம் தேதி தென்மாவட்டங்களில் காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 2,223 மெகாவாட், குறைந்தபட்சமாக 994 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மின்உற்பத்தி அதிகளவாக 320 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. காலை 9 மணியளவில் மின்உற்பத்தி 3 மெகாவாட் என்ற அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
இதனால், வேறுவழியின்றி 2 மணிநேர மின்வெட்டு பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் அமலுக்கு வந்ததாக மின் துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT