Published : 21 Nov 2018 05:57 PM
Last Updated : 21 Nov 2018 05:57 PM
'கஜா' புயல் மற்றும் கனமழை காரணமாக நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எனினும் வீடு, வாசல், கால்நடைகள், உடைமைகளை இழந்த மக்களின் அத்தியாவசியத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டியின் நிலை குறித்து கிருஷ்ணா புத்தக நிலைய உரிமையாளர் ஆனந்திடம் பேசினேன்.
''திருத்துறைப் பூண்டி முழுவதுமே இருளில் மூழ்கியுள்ளது. இங்குள்ள 24 வார்டுகளில் எங்கும் மின்சாரம் இல்லை. கரூர் மற்றும் திருவண்ணாமலை நகராட்சியைச் சேர்ந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ள திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்கியுள்ளனர். இதனால் பள்ளி எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை.
மொட்டையாகிப் போன கிராமங்கள்
கிராமப்புறங்களில் இன்னும் மரங்களே அப்புறப்படுத்தப்படவில்லை. அனைத்து இடங்களிலுமே மரங்கள் இருந்த இடங்கள் மொட்டையாக நிற்கின்றன. எந்த மரங்களுமே 'கஜா' புயலுக்குத் தாக்குப் பிடிக்கவில்லை. கிராமங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது 1 மாதம் ஆகும்.
பள்ளன்கோவிலில் அமைந்துள்ள துணை மின் நிலையம் இன்னும் சீராகவில்லை. மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்களில் இருந்து செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ள முடிகிறது. திருவாரூருக்கு மட்டும் மின்சாரம் வந்திருக்கிறது. தன்னார்வ அமைப்புகள் மூலம் ஜெனரேட்டர் வழியாக மின்சாரம் கிடைக்கிறது. பால் கிடைக்கிறது. ஆனால் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.
மின்சாரம் இல்லாததால் கொசுவர்த்தி, மெழுகுவர்த்தியை அதிக விலைக்கு விற்கிறார்கள். வீடுகளில் கூரை இல்லாததால், தார்ப்பாய் கூட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எங்கள் மக்கள் மீண்டு வர 20 வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்'' என்று உடைந்த குரலில் சொல்கிறார் ஆனந்தன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT