Published : 29 Nov 2018 08:39 AM
Last Updated : 29 Nov 2018 08:39 AM
நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் மா சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கஜா புயல் அடியோடு அழித்துவிட்டது.
அங்குள்ள செம்போடை கிரா மத்தைச் சேர்ந்தவர் வை.அஞ்சம் மாள். சுமார் 60 வயது இருக்கும். கடந்த இரண்டு வாரங்களாக அவரால் சாப்பிட முடியவில்லை; தூங்க முடியவில்லை; தரையோடு விழுந்து கிடக்கும் மா மரங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறார்.
அவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கருக்கும் சற்று அதிகமான நிலப் பரப்பு உள்ளது. அங்கேயே வீடு இருக்கிறது. அந்த வீடு புயலால் கடுமையாக சேதம் அடைந்துள் ளது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
வாட்டியெடுக்கும் துக்கத்தை அடக்கியபடி அஞ்சம்மாள் பேசி னார். “எங்க வீட்ட சுத்தி 30 மாமரங் கள் இருந்தன. முந்திரி மரமும் வச்சிருந்தோம். இந்த மரங்களால வருஷத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு குறையாம வருமானம் வந்துச்சி. நாங்க சாதாரண குடும்பம். எங் களுக்கு இது மட்டும்தான் வருமானம். கிட்டத்தட்ட இருபது, முப்பது வருஷம் இந்த மரங்கதான் எங்க வயித்துக்கு கஞ்சி ஊத்தி கிட்டு வந்துச்சி. ஒரு நாள் ராத்திரி யிலே எல்லாமே முடிஞ்சி போச்சு”. அதற்குமேல் பேச முடியாமல் விம்மினார்.
அதே செம்போடை கிராமத் தைச் சேர்ந்தவர் டாக்டர் வி.ஜி.சுப்ர மணியன். நேதாஜி மருத்துவமனை என்ற பெயரில், நகரப் பகுதிகளுக்கு இணையான வசதி கொண்ட மருத் துவமனையை அந்த குக்கிரா மத்தில் நடத்தி வருகிறார். புயலின் பாதிப்பு அவரையும் விட்டு வைக்கவில்லை.
“நான் 8 ஏக்கர் நிலத்துல மா சாகுபடி செஞ்சுட்டு வந்தேன். 350 மரங்கள் இருந்தன. கார் போகம், பெரும்போகம்னு வருஷத்துக்கு இரண்டு முறை மகசூல் கிடைக் கும். இதில் மட்டும் வருஷத்துக்கு 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைச்சது. தேக்கு மரங்களும் நிறைய இருந் தன. இப்போ ஒரு மரம் கூட இல்லை. எல்லாம் கீழே கிடக்குது” என்று கூறியவர், "இந்த நிலத்தை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியுமான்னு தெரி யல" என்று மிகவும் கவலையோடு பேசினார்.
இவர்கள் இருவரும் உதாரணங் கள் மட்டுமே. இவர்களைப் போலவே 10 மரங்கள் வைத்திருந் தவர்கள், 100, 200 மரங்கள் வைத் திருந்தவர்கள், 1000, 5000 மரங்கள் வைத்திருந்தவர்கள் என்ற நிலை களிலும் இங்கு மா சாகுபடி விவ சாயிகள் உள்ளனர். இப்போது அவர்களில் யாருக்கும் எதுவும் இல்லை என்றே கூற வேண்டும். அந்த பகுதியில் 90 சதவீதமான மரங் கள் கீழே சாய்ந்து கிடக்கின்றன.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங் களுக்கு அடுத்து தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் வேதாரண் யம், தலைஞாயிறு பகுதிகளில் பெருமளவில் மா சாகுபடி நடை பெறுகிறது. இங்குள்ள செம் போடை, புஷ்பவனம், கத்தரிப் புலம், குரவப்புலம், தேத்தாக்குடி, பெரியகுத்தகை, கருப்பம்புலம், செண்பகராயநல்லூர், கோவில் பத்து என பல கிராமங்களில் மா சாகுபடி பிரதான விவசாயமாக உள்ளது. சுமார் 8,000 ஏக்கர் அளவுக்கு மா சாகுபடி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரி விக்கின்றனர்.
இங்கு பல்வேறு ரக மாமரங் கள் இருந்தாலும், ருமானி, நீலம், செந்தூரா வகை மரங்களைத்தான் விரும்பி அதிக அளவில் சாகுபடி செய்கிறார்கள். இதுகுறித்து தெரி வித்த டாக்டர் சுப்ரமணியன், “தை மாதம் பூக்கத் தொடங்கி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் மகசூல் கொடுக்கறதை பெரும் போகம்னு சொல்றோம். அந்த நேரத் துல எல்லா ஊர்லயும் மாங்காய், மாம்பழம் கிடைக்கும். எல்லா ரக மரங்களும் காய்க்கும். அந்த வழக்கமான சீசன்ல உற்பத்தி அதிகமா இருக்கிறதாலே அதிக விலை கிடைக்காது.
கார் போகம்னு இன்னொரு போகம் இருக்கு. ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மகசூல் கிடைக்கும். இதை ஆஃப் சீசன்னு சொல்லுவாங்க. இந்த கார் போகத் துல தமிழ்நாட்டிலேயே எங்க ஊர்ல தான் மாங்காய் அதிகமா காய்க் கும். அதுவும் ருமானி, நீலம் ரகங் கள் நல்ல மகசூல் கொடுக் கும்.
அந்த நேரத்துலதான் ஓணம் பண்டிகை வரும். கேரளத்துல எங்க ஊரு மாங்காய்க்கு பயங்கர கிராக்கியா இருக்கும். வண்டி, வண் டியா எங்க ஊரு மாங்காயெல்லாம் கேரளம் போகும். சீசன்ல கிலோ 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் விற்பனையாகிற மாங்காய், கார் போகத்துல 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரைக்கும் விலை போகும். இந்த கார் போகம்தான் எங்க ஊரு மா சாகுபடி விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கிற காலம். இப்போ மரமே இல்லாமப் போச்சு” என்றார்.
சாகுபடி இழந்து நிற்கும் விவ சாயிகள் நிலை பற்றி தெரிவித்த புஷ்பவனம் அன்னை இந்திரா சமூக கல்வி மையத்தின் நிறுவனரான கோ.சு.மேரிகாந்த், “வருமானத்தை முழுசா இழந்து நிற்கும் விவசாயி கள், இழப்புகளை மறந்துட்டு, மீண் டும் முழு வீச்சோட சாகுபடியில இறங்க சில ஆண்டுகள் ஆகலாம்.
அதுவரைக்கும் மாதாந்திர அடிப்படையில் அவங்களுக்கு உதவித் தொகை கொடுப்பது பற்றி அரசு பரிசீலிக்கணும். தொகை எவ் வளவு என்பது முக்கியமல்ல. இந்த அரசு நம்மோட இருக்குது என்ற நம் பிக்கையை அவர்களுக்கு கொடுத் துகிட்டே இருக்கணும். அந்த நம்பிக் கையை வளர்த்தால் எங்கள் ஊரு விவசாயிகள் நிச்சயம் மீண்டு வந்திடுவாங்க” என்றார்.
வேதாரண்யம் பகுதி விவசாயி கள் தங்கள் ஊர் சாகுபடிக்கு ஏற்ற மாங்கன்றுகளைப் பெரும்பாலும் சித்தூர், ராஜமுந்திரி போன்ற ஆந் திர மாநில பகுதிகளில் இருந்துதான் வாங்கி வருகிறார்கள். அங்குதான் தரமான கன்றுகள் கிடைப்பதாக வும், அசல் ரகத்தை நம்பி வாங்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
இந்த விவசாயிகளின் வாழ்வா தாரங்களை மீட்டெடுக்கும் வகை யில் அரசே இந்த பகுதிக்கென பிரத்யேக மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வேதாரண்யம் வட்டார விவசாயி கள் சங்கத் தலைவர் டி.வி.ராஜன் கூறுகிறார்.
“போலி ரகங்கள் இல்லாத எங்க ஊருக்கு ஏற்ற அசலான, தரமான மாங்கன்றுகள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்யணும். குறுகிய காலத்துல பலன்கள் கிடைக்கும் வகையில மா வயல்களிலேயே ஊடுபயிர் சாகுபடி செய்ய சிறப்பு பயிற்சி தரணும்” என்று வலியுறுத்துகிறார்.
கஜா புயலால் சாய்க்கப்பட்ட வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியின் மா விவசாயிகள் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். அதற்கான திட்டங்களை அரசும், வேளாண் ஆராய்ச்சியாளர்களும் உருவாக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் மட்டுமல்ல; மா சாகுபடியில் இந்த பகுதிக்கென உள்ள பல தனித்துவங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT