Last Updated : 13 Nov, 2018 10:02 AM

 

Published : 13 Nov 2018 10:02 AM
Last Updated : 13 Nov 2018 10:02 AM

முதல்வர், அமைச்சர்களின் பாதுகாப்பில் ஈடுபடும் எங்களுக்கு உரிய ஓய்வு கொடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு போலீஸார் கோரிக்கை

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எங்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தண்டையார்பேட்டையில் வசித்து வந்தவர் போக்குவரத்துப் பிரிவு காவலர் தேஸ்குமார் (40). தமிழக முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதன் எதிரொலியாக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழக முதல்வரின் பாதுகாப்புப் பணியில் சென்னை பாதுகாப்புப் பிரிவு போலீஸார் ஈடுபடுகின்றனர். தலைமைச் செயலகத்தில் மட்டும் இந்தப் பிரிவைச் சேர்ந்த சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களின் சோதனைக்குப் பிறகே வெளி நபர்கள் யாரும் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முடியும். வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையில் ஈடுபடுவார்கள்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் விழா நடைபெறும் எல்லைக்கு உட்பட்ட காவல் மாவட்ட பிரிவு போலீஸாரும் காவல் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் மேற்பார்வையில் 4 உதவி ஆணையர்கள், 5-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் என சுமார் 300-க் கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுவார்கள்.

போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போக்குவரத்து போலீ ஸாரும் வரவழைக்கப் படுவார்கள். முதல்வர் செல்லும் பாதையில் சுமார் 50 அல்லது அதற்கு குறைவான மீட்டருக்கு ஒரு போலீஸார் வீதம் நிறுத்தப்பட்டிருப்பார்கள். விழா நடைபெறுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன், பணிக்காக நியமிக்கப்பட்ட போலீஸார் பணிக்கு வந்து விட வேண்டும்.

முதல்வர், அமைச்சர்கள் தவிர 5,000 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, 7,000 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் அதற்கு தகுந்தாற்போல் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் இதர பிரிவில் உள்ள போலீஸார் வரவழைக்கப்படுவார்கள்.

நுண்ணறிவு மற்றும் உளவுப் பிரிவு போலீஸாரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இவர்கள் இந்த பாதுகாப்புப் பணியை முடித்து விட்டு வழக்கமான பணியை மேற்கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தும்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உரிய ஓய்வு வழங்க வேண்டும் என பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஓய்வு இல்லாமல் பணியில் ஈடுபடுவதால் உடல் நலம், மன நலம், குடும்ப நலம் மற்றும் வாகனம் ஓட்டும்போது சில நேரம் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸார் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் போலீஸாருக்கும் தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "சென்னைக்கு 25,000 போலீஸார் தேவைப்படுகின்றனர். ஆனால், சுமார் 18,000 போலீஸார் மட்டுமே உள்ளனர். பற்றாக்குறை காவலர்களை வைத்தே அனைத்து பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது. இதனாலேயே சில நேரம் காவலர்களுக்கு தொடர்ந்து பணி ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பற்றாக்குறை காவலர்கள் சரி செய்யப்பட்ட உடன் அனைத்தும் சரியாகி விடும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x