Published : 04 Nov 2018 01:02 AM
Last Updated : 04 Nov 2018 01:02 AM
கடந்த 35 ஆண்டுகளில் பொரு ளாதார ரீதியாக இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு வறுமை ஒழிந்துள்ளது. உலகில் இன்னும் வறுமை எஞ்சியுள்ள நாடுகளில் இந்தியாவின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு வறுமையை ஒழிக்கப் பாடுபடுவோம் என்று அமெரிக்க அமைப்பின் தலைவர் ஆர்தர் சி.ப்ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையாளரும் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட அமெரிக்கன் எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட் (ஏஇஐ) என்ற அமைப்பின் தலைவருமான டாக்டர் ஆர்தர் சி.ப்ரூக்ஸ் மற்றும் அதன் உறுப்பினர் சதானந்த் துமே ஆகியோர் ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர்கள் குழுவை நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்காவின் பொருளா தாரம், அரசியல் கொள்கைகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிலவிவரும் ஜனநாயக, பொருளாதார நிலைமை, வறுமை ஒழிப்பு,இந்தியா - அமெரிக்க உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துகூட்டத்தில் விவாதம் நடந்தது.
நிகழ்ச்சியில் ஆர்தர் சி.ப்ரூக்ஸ் கூறியதாவது: ‘தி இந்து' நாளிதழின் உயர்தரமான செய்திகள் மற்றும் சிறந்த இதழியல் பாரம்பரியத்தை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் சியாட்டில் நகரில் வசித்து வந்தேன். வறுமை என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருந்த நான், 35 ஆண்டுகளுக்கு முன்பாக கொழும்பில் இருந்து விமானத்தில் வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் தற்செயலாக இறங்க வேண்டியிருந்தது. அப்போது கையில் ஒரு சில டாலர்களை மட்டுமே வைத்திருந்த நான்சென்னை நகரில் சுற்றி வந்தேன். அப்போதுதான் வறுமையில் வாடும் மக்களைப் பற்றி தெரிந்துகொண்டேன். 19 வயதில் நான்கண்ட காட்சிக்கும் தற்போது இந்தியா கண்டுள்ள வளர்ச்சியையும் ஒப்பிடும்போது அபரிமிதமான வளர்ச்சியை காண முடிகிறது.
30 முதல் 40 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியில் வந்து நடுத்தரவர்க்கத்தினராக மாறியுள்ளனர். இந்தியா உலகிலேயே வித்தியாசமான நாடாக உள்ளது. இந்தியாவிலும், சீனாவிலும் கடந்த 30 ஆண்டுகளில் 80 சதவீதம் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. உலகமயம், வர்த்தக விதிகள் தளர்வு, சொத்து உரிமைகள், சட்டம்-ஒழுங்கு, கலாச்சார பகிர்வு இந்த 5 விஷயங்கள்தான் இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியா, சீனாவில் நடந்துள்ள இந்த மாற்றத்தை முன்மாதிரியாகக் கொண்டு, உலகில் இன்னும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 200 கோடி மக்களை வறுமைக் கோட்டில் இருந்து வெளியில் கொண்டு வர எனது எஞ்சிய வாழ்நாளை அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன். பொருளாதார நெருக்கடியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சந்தித்தது. அப்போது முதல் அமெரிக்காவில் 60 சதவீதம் மக்களிடம் எந்த பொருளாதார முன்னேற்றமும் இல்லை. அனைத்து வளமும் 40 சதவீதம் மக்களிடம் மட்டுமே உள்ளது.
அதிபர் ட்ரம்ப் வெளியிடும் பரபரப்பான அறிவிப்புகள் அவரது ஆதாவாளர்களை மட்டுமே மகிழ்ச்சியடைய வைக்கிறது. அவரதுஅறிவிப்புகளை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பத்திரிகைகள்தான் பெரிதாக எடுத்துக் கொள்கின்றன. அவர் சொல்வதில் பல விஷயங்களைச் செய்வதில்லை. அவர், கடிப்பதைக் காட்டிலும் குரைப்பது அதிகம். சில நேரங்களில் கடிப்பதைவிட குரைப்பது மோசம் என்ற நிலையை எட்டிவிடுகிறது. அவர் நீண்டகாலம் பதவியில் இருக்கமாட்டார். அவர் தொழில்துறை , பத்திரிகைகள் மற்றும் குடியேறிய மக்கள் மீது நடத்திவரும் வார்த்தை தாக்குதல் புதிதல்ல. அதிபர்களாக இருந்த நிக்சன், கென்னடி, ட்ருமென், ரூஸ்வெல்ட் போன்றவர்கள்கூட பத்திரிகைகளை மோசமாக விமர்சித்துள்ளனர். பொருளாதார நெருக்கடிவரும்போதெல்லாம் டிரம்ப் போன்ற தலைவர்கள் உருவாவது வரலாறு. ஆனால் அவர்கள் நீண்டகாலம் தாக்குபிடிக்க மாட்டார்கள்.
வெளிநாடுகளில் இருந்துகுடியேறியவர்கள் அமெரிக்கா வுக்கு மிகவும் முக்கியமானவர்கள். அமெரிக்காவின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு அதிகம். எனவே,அவர்களுக்கு எதிராக டிரம்ப் போன்றவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தியாவில் வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் இருப்பது நீண்டகாலமாக உள்ளது. இத்தகைய பேச்சுக்கள் வன்முறையாக மாற அனுமதிக்கக் கூடாது.
ட்ரம்ப் வெளியிடும் அறிவிப்புகளை மாற்றுக்கருத்து என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பலதரப்பட்ட எதிரெதிர் கருத்துகள் போட்டியிடும் போது தான் சிறந்த கொள்கை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT