Last Updated : 15 Nov, 2018 08:32 AM

 

Published : 15 Nov 2018 08:32 AM
Last Updated : 15 Nov 2018 08:32 AM

வட இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி உபரி; தமிழகத்தில் பற்றாக்குறை: கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.500 கோடி நிவாரணம் வேண்டும்-  ஏற்றுமதியை அதிகரிக்கவும் பழனி ஜி.பெரியசாமி கோரிக்கை

கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தித் தொழிலை நம்பியுள்ள 5 லட்சம் குடும்பங்கள் மற்றும் கிராமப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும். மேலும் சர்க்கரை ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்.

வட இந்தியாவில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப் படுவதால் சர்க்கரை உற்பத்தி உபரியாக உள்ளது. அதே நேரத்தில் வறட்சி, போதிய மழை யின்மையால் கரும்பு மகசூல் குறைந்து, தமிழகத்தில் உற்பத்தி பற்றாக்குறையாகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 2 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக 35 டன் கரும்பு கிடைக்கிறது. 1 டன் கரும்பில் 850 கிலோ சர்க்கரை கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 40 ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் 25 லட்சம் டன். ஆனால் இந்த ஆண்டு அரவைக் காலத்தில் (அக்.2018 முதல் செப்.2019 வரை) 8 லட்சத்து 50 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சர்க்கரை தேவை 18 லட்சம் டன். எனவே, 9 லட்சத்து 50 ஆயிரம் டன் சர்க்கரை பற்றாக்குறையாக உள்ளது.

தேவையான அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாமல் ஆலை கள் நிதிச் சிக்கலில் தவிக்கின்றன. அதனால், கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையைக்கூட விவசாயிகளுக்கு வழங்க முடிய வில்லை. இதையடுத்து கரும்பை எத்தனால் உற்பத்திக்கும் பயன் படுத்தும் வகையில் கொள்கை அறிவிக்கப்பட்டது. எத்தனால் 5 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எத்தனால் தயாரிப்பு உபகரணங்கள் வாங்க மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி கடனாகக் கொடுக்கிறது.

தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அதிக மகசூல் தரும் 20 வகையான புதிய ரக கரும்புகளை பயிரிட்டால் பயன் கிடைக்கும்.

இந்தியாவில் தற்போது 107 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பு உள்ளது. இந்த ஆண்டு 315 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் 422 லட்சம் டன் சர்க்கரை கிடைக்கும். ஆனால், சர்க்கரை நுகர்வு 260 லட்சம் டன். சீனா, பங்களாதேஷ், பர்மா, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்பிறகும் 112 லட்சம் டன் சர்க்கரை உபரியாக இருக்கும்.

கரும்பு, சர்க்கரை உற்பத்தியை நம்பியுள்ள 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத் தையும் கிராமப் பொருளாதாரத் தையும் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு பழனி ஜி.பெரியசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x