Published : 12 Nov 2018 03:27 PM
Last Updated : 12 Nov 2018 03:27 PM
தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல் கடலூர், வேதாரண்யம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் சென்றால் 15-ம் தேதி காலை முதல் நண்பகலுக்குள் கடலூர், வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயலால் முதலில் வட உள்மாவட்டங்கள் மட்டும் மழையைப் பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால், புயலின் திசையைப் பார்க்கும்போது, தென்தமிழகத்தில் உள்மாவட்டங்கள் ஒருசிலவற்றிலும் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?
கஜா புயலால் சென்னையில் 14-ம் தேதியில் இருந்து மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த வட தமிழக கடற்கரைப்பகுதிகளும் 14-ம் தேதியில் இருந்து மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை கஜா புயல் சென்னையில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது. ஆதலால், காற்றுபலமாக வீசுவதற்கு வாய்ப்பில்லை, ஆனால், காற்று லேசான அளவில் இருக்கும்.
இந்த புயலின் இழுவை விளைவு(புல் எஃபெக்ட்) காரணமாகச் சென்னைக்கு 15 மற்றும் 16-ம் தேதிகளிலும் மழை கிடைக்கும். அடுத்த 14 முதல் 16-ம் தேதிவரை சென்னையில் முன்பு கணித்ததைக் காட்டிலும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையில் 150 மி.மீ மழைவரை கிடைத்தால் அது மகிழ்ச்சிதான். அக்டோபர் 1-ம் தேதி 200மிமீ மழை சென்னையில் பெய்தது நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்.
மிக கனமழை
டெல்டா பகுதியில் புயல் கரையைக் கடக்கும்போது மிக,மிக கனமழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தென்தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், மலைப்பகுதி மாவட்டங்களிலும் மழை இருக்கும். ஆனால், வர்தா, தானே புயல் அளவுக்கு வலிமையானதாக கஜா புயல் இருக்காது.
அடுத்த இரு நாட்களில் கஜாபுயல் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயல் மேற்கு, தென்மேற்காக நகர்வதால், வலிமையானதாக இருக்காது என்று கணிக்கப்பட்டது. அதன்படி, காற்று மணிக்கு 60 முதல் 80 கி.மீ வரையிலும் நிலத்தை அடையும் போது 90 முதல் 100 கி.மீ வரையிலும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னையில் 120கிமீ வேகத்தில் காற்றுவீசி புரட்டிப்போட்ட வர்தா புயல், 140 கி.மீ வேகத்தில் வீசிய தானே புயலோடு ஒப்பிடும் போது கஜா புயல் வேகம் குறைவுதான்.
அடுத்த காற்றழுத்த தாழ்வுநிலை
கஜா புயல் அரபிக்கடலுக்குள் சென்றபின் வடகிழக்கு பருவமழை தூண்டப்பட்டுத் தீவிரமடையும். உள்மாவட்டங்களில் 16-ம்தேதிவரை மழைபெய்யக்கூடும். ஆனால், கஜா புயல் கடந்து சென்ற அடுத்த சில நாட்களில் அதாவது 19-ம் தேதி அல்லது 20-ம் தேதி வங்கக்கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், கஜா புயலுக்குப்பின், தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழையால் அடுத்து வரும் நாட்கள் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மீனவர்கள் 16-ம் தேதிவரை வங்கக்கடலுக்குள் செல்ல வேண்டாம். கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும். இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் மன்னார் வளைகுடா பகுதிக்குள் செல்லவும் வாய்ப்புள்ளது. புயல் கரைகடக்கும் முன் திசையில் இன்னும் மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT