Published : 04 Nov 2018 12:00 AM
Last Updated : 04 Nov 2018 12:00 AM
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை இருந்த பட்டாசு வர்த்தகம் தற்போது ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பட்டாசு வெடிப்பதும், அதனால் நகர்ப்புறங்களில் உருவாகும் குப்பைகளும் அதிகரித்துள்ளன.
தேவைக்கு ஏற்ப பட்டாசு வாங்கிய காலம் போய், தற்போது தீபாவளி சிட் பண்டு கலாச்சாரம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவிக் கிடக்கிறது. இதனால் நம் தேவைக்கும் அதிகமாக பட்டாசு கிடைத்துவிடுகிறது. நமக்கு தேவையோ, தேவையில்லையோ, பிடிக்கிறதோ, இல்லையோ, பட்டாசுகள் நம்மிடம் திணிக்கப்படுகின்றன. சிட் பண்டு நடத்தும் சிலர் லாப நோக்கில், தரமில்லாத பட்டாசு வகைகளை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். அதை நாம் வாங்கி விட்டோம் என்பதற்காகவே வெடித்து தீர்க்க வேண்டியுள்ளது. அதனால் பட்டாசு குப்பைகள் அதிகரித்து விடுகின்றன.
பட்டாசுகளை வெடிக்கும்போது சத்தம் அதிகம் எழுப்ப வேண்டும் என்பதற்காகவும், அதிக வெளிச்சத்துக்காகவும், பல்வேறு வண் ணங்களை வெளியிடவும், பட்டாசுகளை தயாரிக்கும்போது பல்வேறு வேதிப் பொருட்கள், நச்சு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை அனைத்தும் மனிதனுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் தீங்கு விளைவிப்பதோடு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. அதனால் பட்டாசுக் கழிவுகளை தனியாக பிரித்து அழிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு குப்பைகளை பிரிப்பது என்பது உள்ளாட்சிகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
எடுத்துக்காட்டாக சென்னை மாநகராட்சியில் தினமும் 5 ஆயிரத்து 500 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. பட்டாசுகளை வெடிக்கும் போது உருவாகும் குப்பைகள், வழக்கமான குப்பைகளுடன் கலந்துவிடுகின்றன. அவற்றை தனியாக பிரிப்பது என்பது சிக்கலானது. அதனால் எல்லாம் கலந்த குப்பையாகவே கொண்டுபோய் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகிறது. அதன் விளைவாக பட்டாசு குப்பைகளில் உள்ள வேதிப்பொருட்கள் கலந்து நிலத்தடி நீர் மாசு, மண் மாசுபடுவது அதிகரிக்கிறது.
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு தீபாவளியின்போதும் சம்பிரதாயத்துக்காக சுமார் 90 டன் அளவில் பட்டாசு குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்படி, கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயக் கழிவுகள் அழிக்கும் தொழிற்சாலையில் கொடுத்து அழிக்கப்படுகிறது.
பட்டாசில் உள்ள நச்சுப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
பட்டாசு வெடிப்பதன் மூலம் வெளியேறும் சல்பர் டையாக்சைடு வாயுவால், அமில மழை ஏற்பட வாய்ப்புள்ளது. இது, நீராதாரம், வேளாண்மை போன்றவற்றை பாதிக்கும். பெர்குளோரேட்- அமோனியம், பொட்டாஷியம் ஆகியவை நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகளில் உள்ள நீர் ஆகியவற்றை மாசுபடுத்தும். அதன் மூலமாக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தைராய்டு நோய் வர வாய்ப்புள்ளது. செம்பு கூட்டுப் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும். லீட் டையாக்சைடு, நைட்ரேட், குளோரைடு ஆகியவை குழந்தைகள் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும். ஆர்செனிக் கூட்டுப் பொருள் நுரையீரல் புற்று நோயை ஏற்படுத்தும்.
இவ்வாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பட்டாசுகளை குறைவாக வெடித்து, நச்சு குப்பைகள் உருவாவதை குறைத்து, சந்தோஷம் பொங்கும் தீபாவளியை உறுதி செய்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT