Published : 06 Nov 2018 08:59 AM
Last Updated : 06 Nov 2018 08:59 AM

ரூ.10 கோடியில் நிரந்தர கட்டமைப்புக்கு ஏற்பாடு: சென்னை மாநகரின் நீராதாரமாக மாறும் சிக்கராயபுரம் கல் குவாரிகள்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளை இணைத்து ரூ.10 கோடி செலவில் நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருகிறது. அதன் காரணமாக சென்னை மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது என்பது சென்னை குடிநீர் வாரியத்துக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதை சமாளிக்க, மாற்று நீராதாரமாக சிக்கராயபுரம் கல்குவாரியில் உள்ள நீரை சுத்திகரித்து குடி நீராக விநியோகிக்கும் சோதனை அடிப்படையிலான திட்டம் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் சிக்கராயபுரம் கல்குவாரியில் ரூ.10 கோடியில் சீரமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறிய தாவது: கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீரை, தேர்வாய் கண்டிகையில் 500 மில்லியன் கன அடி அளவுக்கு மட்டுமே தேக்கி வைக்க முடியும். அதற்கு மேல் தேக்கி வைக்க சென்னையில் இடம் இல்லை. இந்நிலையில் கிடைக்கும் மழை நீரை கைவிடப்பட்ட கல் குவாரி களில் சேமிக்க திட்டமிடப்பட்டது.

கல்குவாரியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட தால், அதற்கான குடிநீர் இரைக் கும் இயந்திரங்கள் வாடகைக்கு வாங்கப்பட்டன. அத்திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்குள்ள குவாரிகளை இணைக்கவும், நிரந்தர கட்டமைப்புகளை ஏற்படுத் தவும், சொந்தமாக நீர் இரைக்கும் இயந்திரங்களை வாங்கவும் குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிக்கராயபுரத்தில் மொத்தம் 23 குவாரிகள் உள்ளன. இவற்றில் ஓரிரு குவாரிகளுக்கு மட்டும், செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல, இயற்கையான கால்வாய் உள்ளது. மற்ற குவாரிகளில், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தானாக நீர் செல்லும் வசதி இல்லை. அதனால் ஒரு குவாரியில் நீர் குறையும்போது, அங்கு நிறுவப்பட்ட நீர் இரைக்கும் மோட்டார் பம்புகளை அகற்றி, மற்றொரு குவாரியில் நிறுவப்பட்டது. இப்பணி மிகவும் சிரமமாக இருந்தது.

இந்நிலையில், அனைத்து குவாரிகளிலும், தேவையான அளவு நீரை வெளியேற்றி, துளையிட்டு, ஒவ்வொரு குவாரிக்கும் இணைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு இணைப்புகளை ஏற்படுத்திய பின், ஒரே இடத்தில் இருந்து மட்டும் நீரை எடுத்துக்கொள்ளலாம்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அங்கு 350 முதல் 500 மில்லியன் கன அடி (அரை டிஎம்சி) நீரை தேக்க முடியும். இந்த அளவு, ஒட்டுமொத்த சென்னையில் நீர் தேவையை 15 நாட்களுக்கு பூர்த்தி செய்யும். தினமும் 30 மில்லியன் கனஅடி வீதம் எடுத்தால் 4 மாதங்களுக்கு பயன்பெறலாம். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு விருப்பம் உள்ளோரை அழைத்திருக்கிறோம். விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x