Published : 04 Nov 2018 12:57 AM
Last Updated : 04 Nov 2018 12:57 AM
சிறப்புவாய்ந்த காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் பழைய வடிவங்களை (டிசைன்கள்) நவீன முறையில் புதுப்பிக்க கைத்தறித் துறை சார்பில் டிஜிட்டல் லைப்ரரி தொடங்கப்பட்டுள்ளது. பட்டுச் சேலைகளை புதுப்பிப்பதற்கு மட்டும் அல்லாமல், பட்டுச் சேலைகளின் டிசைன்களை முழுவதும் நவீனமாக வடிவமைக்க, எலெக்ட்ரானிக் ஜாக்கார்டு இயந்திரம் குறித்து 240 நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் கைத்தறித்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
துளையிடப்பட்ட அட்டைகளில் ஜாக்கார்டுகள் தயாரிக்கப்பட்டு, பட்டுச் சேலை வடிவங்களுக்காகத் தறிகளில் பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையிலான இந்த ஜாக்கார்டு தயாரிப்பது என்பது நெசவாளர்களுக்கு பெரும் சுமையான பணியாக உள்ளது.
இந்நிலையில் பட்டுச் சேலைகளில் நவீனங்களைப் புகுத்தவும், நெசவாளர்களுக்கான வேலை மற்றும் செலவுகளை குறைக்கவும் கைத்தறித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி பழைய பட்டுச் சேலைகளின் டிசைன்களை நவீன முறையில் வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக டிஜிட்டல் லைப்ரரி தொடங்கப்பட்டுள்ளது.
இதில் பழைய பட்டுச் சேலைகளின் அரிய டிசைன்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட டிசைன்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பட்டுச் சேலைகளில் நவீனங்களைப் புகுத்த, எலெக்ட்ரானிக் ஜாக்கார்டு இயந்திரங்களை போதிய அளவுக்குநெசவாளர்களுக்கு வழங்குவதுடன், அதில் பயிற்சி அளிக்கவும் வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள 40 ஆயிரம் நெசவாளர்களில் இந்தஎல்க்ட்ரானிக் ஜாக்கார்டு இயந்திரங்களை 21 நெசவாளர்களே பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர் செல்வம் கூறும்போது, “தற்போது மேலும் 50 பேருக்கு எல்க்ட்ரானிக் ஜாக்கார்டு இயந்திரங்கள் வழங்க அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்” என்றார்.
கே.எஸ்.பி. பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தின் துணைத் தலைவர்கே.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "எலக்ட்ரானிக் ஜாக்கார்டு இயந்திரங்களை வாங்கப் பல நெசவாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் விலை ரூ.2.25 லட்சம். அரசு சார்பில் 90 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுவதால் குறைந்த நபர்களுக்கே வழங்கப்படுகிறது. இந்த இயந்திரங்களை போதிய அளவில் வழங்கிப் பயன்படுத்த உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து பயிற்சி அளிக்கும் மத்திய பட்டுத் தொழில் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது. “ஆண்டுக்கு 240 பேருக்கு எலெக்ட்ரானிக் ஜாக்கார்டு பயிற்சி அளிக்கத்திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT