Published : 22 Nov 2018 04:45 PM
Last Updated : 22 Nov 2018 04:45 PM
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசு முன்வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே எழுந்துள்ளது. இவர்களது நீண்ட நாள் கனவு நனவாகும் வகையில் அதற்கான நடவடிக்கை களை அரசு தொடங்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்து வைத்துள்ளது கிரிக்கெட்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெருநகரமாக விளங்கும் கோவையிலும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக் கப்படுமா? என்றும், அங்கு விளையாட வரும் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை நேரில் காண வாய்ப்பு கிடைக்குமா? என்று தவமிருக்கின்றனர் கோவை ரசிகர்கள்.
சர்வதேச போட்டிகளுக்கு மாற்றாக ‘ஐ.பி.எல்.' என்றழைக்கப் படும் இந்தியன் பிரீமியர் லீக், ‘டி.என்.பி.எல்.'எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்ற ஆண்டுதோறும் நடத்தப்படும் டி-20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
டி.என்.பி.எல். போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படு கின்றன. இதேபோல் கோவையில் போட்டி நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவையில் தெண்டுகல்கர்
“கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப் பட்டு வருகிறது. மைதானம், வீரர்கள் விளையாடும் பகுதி, ஸ்பிரிங்க்லர், கழிவுநீர் வெளியேற்றும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. மின்னொளி, மைதானத்துக்கு வெளியில் வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் இடம் ஆகிய வற்றை அமைப்பதற்கான பணி களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டுள்ளது” என்கிறார், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் எஸ்.கௌதமன்.
அவர் மேலும் கூறியதாவது:
கோவையில் சர்வதேச வீரர்கள் விளையாடிய இரு போட்டிகள் 1980-களில் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அரிமா சங்கத்தினர் காட்சி கிரிக்கெட் போட்டி நடத்தினர். அதில் சச்சின் தெண்டுல்கர், ஜடேஜா தலைமையில் இரு அணிகள் மோதின.
இதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்திய தியோடர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, வனக் கல்லூரி மைதானத்தில் கபில்தேவ் தலை மையில் வடக்கு மண்டல அணியும், அசாருதீன் தலைமையில் தென் மண்டல அணியும் விளையாடின.
இந்திய அணி வீரர்கள் விளையாடும் சர்வதேச போட்டிகளை கோவை ரசிகர்கள் கண்டு ரசிக்கும் வாய்ப்பு விரைவில் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
வீரர்கள் எதிர்பார்ப்பு
கோவை வீரர்களான ஜெகதீசன், கவுசிக் ஆகியோர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். ஹரி நிஷாந்த், மோகன் பிரசாத், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாடி வருகின்றனர்.
ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ஹரி நிஷாந்த், ஜெகதீஷ், சுஜய், கவுசிக், அபிநவ், மோகன் பிரசாத், கவுதம் தாமரைக் கண்ணன், ஷாஜகான், மிதுன் உள்ளிட்ட வீரர்கள் டி.என்.பி.எல். போட்டியில் விளையாடி வருகின்றனர்.
இவர்கள் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி, கோயமுத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ சக்தி தொழில்நுட்பக் கல்லூரி, ரத்தினம் கல்லூரி, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மைதானங்களில் விளையாடி வருகின்றனர்.
சர்வதேச மைதானம் கோவையில் அமைந்தால், இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்கின்றனர் கோவை வீரர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT