Published : 14 Nov 2018 08:29 AM
Last Updated : 14 Nov 2018 08:29 AM
தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் `கால் சென்டர்கள்’ எனப்படும் அழைப்பு மையங்களை பாஜக உருவாக்குகிறது. உத்தரபிரதேச தேர்தலில் அக்கட்சி கையாண்ட இந்த ஃபார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொகுதிவாரியாக தங்களுக்குள்ள செல்வாக்கு, வெற்றிவாய்ப்பு உள்ளிட்ட களநிலவரங்களை நேரில் அறிந்து கட்சியின் தேசிய தலைமைக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களை வாக்குச்சாவடி வாரியாக நியமித்து, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களையும் தேசிய தலைவர்கள் விரைவில்சந்திக்க உள்ளனர். இவர்களிடம்இருந்து களநிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள வும், தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் தமிழகத்தில் 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக அழைப்பு மையங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கெ னவே, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய மையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளுக்கு ஒரு மையம் உள்ளிட்ட 7 மையங்களை உடனடியாக உருவாக்கும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மூத்த நிர்வாகிகள் கூறும்போது, ``இலவசஎரிவாயு சிலிண்டர் பெற்றது உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் புள்ளிவிவரங்களையும் இம்மையங்கள் மூலம் சேகரித்து அவர்களுடனும் பாஜக தலைவர்கள் பேசுவதற்கு இந்த அழைப்பு மையங்கள் உதவும். மேலும், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான வழிகாட்டுதல் மையமாகவும் இவை திகழும்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியுள்ள இணையதள செயலிகளை செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொடுப்பது, பிரதமரின் உரைகள், அறிக்கைகள், மத்திய அரசின் செயல்பாடுகள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் இம்மைய பொறுப்பாளர்கள் ஈடுபடுவார்கள். இம்மையங்களில் அனைத்து நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளும் உருவாக்கப்படவுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT