Published : 18 Nov 2018 10:37 AM
Last Updated : 18 Nov 2018 10:37 AM

மக்களே வசிக்காத 300 ஆண்டு பழமையான குண்டாங்கல் கிராமம்: கிரானைட் குவாரிக்காக கிராமமே விலைக்கு வாங்கப்பட்ட அவலம் 

மதுரை அருகே கிரானைட் குவாரிக்காக, 300 ஆண்டுகள் பழமையான ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கி அங்கு வசித்த மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்ட அவலம் நடந்துள்ளது. தற்போது இந்த கிராமம், மக்களே வசிக்காமல் பாழடைந்து கிடப்பதோடு அந்த கிராம மக்கள், சொந்த மாவட்டத்திலேயே அகதிகளாக வாழும் பரி தாபம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் 1991-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இந்த குவாரி களில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதில் மதுரை நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள புதுதாமரைப்பட்டி அருகே இருக்கும் கிராமம் குண்டாங்கல். இங்கு கிரானைட் குவாரியில் வெடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிமருந்துகளால் புதுதா மரைப்பட்டி, திருமோகூர், குண்டாங்கல், திருவாதவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் பாதிக்கப்பட்டன. வீடுகள் அதிர்ந்து விரிசல் ஏற்பட்டன.

இந்த கிராமங்கள் வழியாக 24 மணி நேரமும் கிரானைட் குவாரியில் இருந்து கற்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், குவாரி வெடி சத்தத்தால் குண்டாங்கல் சுற்றுவட்டார கிராம மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக குண்டாங்கல் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மிக அருகில் கிரானைட் குவாரி செயல்பட்டதால் அந்த ஊர் மக்கள் அங்கு வசிக்க முடியவில்லை. ஊர் மக்கள், குண்டாங்கல்லில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், குவாரி உரிமையாளர்கள், அந்த மக்களை கட்டாயப்படுத்தி அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த வீடுகளையும், காலி மனைகளையும் விலைக்கு வாங்கி அந்த மக்களை வெளியேற்றினர்.

இந்த நிகழ்வை வருவாய், உளவுத் துறை போலீஸார் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இல்லை. அப்போது இருந்த மாவட்ட நிர்வாகமும் கண்டும், காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இக் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துள்ளன. தற்போது இந்த கிராமத்தில் தெருக்கள், மின் இணைப்பு உள்ள நிலையில் வீடுகள் அப்படியே உள்ளன. ஆனால், வீடுகள், தெருக்கள் பாழடைந்து முட்புதர்கள் மண்டி உள்ளன. இந்த கிராம மக்கள், கிரானைட் உரிமையாளர்களிடம் விற்கப்பட்ட தங்கள் கிராமத்தை மீட்டு, மீண்டும் தங்களை குடியமர்த்த வேண்டும் என்று தற்போதுவரை போராடுகின்றனர்.

இக்கிராமத்தில் வசித்த ரத்தினம் என்பவர் கூறியதாவது: நான் பிறந்து வளர்ந்தது இங்குதான் தினமும் வெடி சப்தத்தால் அங்கு வசிக்க முடியவில்லை. 1 லட்சம் ரூபாய், ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு எங்கள் வீடுகளையும், நிலங்களையும் குவாரி உரிமையாளர்கள் விலைக்கு வாங்கினர். வீட்டை விற்க முடியாதுன்னு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டோம்.

தற்போது நாங்கள், எங்க ஊரின் பக்கத்தில் உள்ள புதுதாமரைப்பட்டி, திருமோகூர், திருவாதவூர் பகுதிகளில் அகதிகளாக வசிக்கிறோம். அதில், பல குடும்பத்தினர் அவர்கள் கொடுத்த பணத்தில் வீடு கட்ட முடியாமல் தற்போது வரை வாடகை வீட்டில் வசிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. விவசாயம், ஊர் திருவிழாக்கள், குழந் தைகள் கொண்டாட்டம்னு எங்க ஊர் எப்போதுமே ஆரவாரத்துடன் இருந்தது. தற்போது நாங்கள் பிறந்து வாழ்ந்த ஊர் எங்கள் கண் முன் மக்கள் வாழாமல் பாழடைந்து கிடப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x