Last Updated : 26 Nov, 2018 04:07 PM

 

Published : 26 Nov 2018 04:07 PM
Last Updated : 26 Nov 2018 04:07 PM

புதுச்சேரியில் மறியல் செய்த பாஜகவினர்: கைது செய்தபோது காணாமல் போன போலீஸ் வாகன சாவி

புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்தின் போது மறியலில் இருந்த பாஜகவினரை கைது செய்ய முற்பட்ட போது போலீஸ் வாகன சாவி காணாமல் போனது. அதையடுத்து போலீஸார் அதை தள்ளி ஓரமாக நிறுத்திய சம்பவம் நடந்தது.

கேரள அரசை கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினர் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சித்தானந்தா நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இருந்து இந்திராகாந்தி சிலை சதுக்கம் அருகே சாலை மறியல் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

சிறிது தூரத்தில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயற்சித்தனர். அப்போது இரு தரப்பினருமிடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்ற போது போலீஸார் இருந்த பாதுகாப்பு வாகனத்தின்  சாவியை யாரோ எடுத்து சென்றதன் காரணமாக பின்னால் இருந்த வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸார் வாகனத்தை கீழே இறங்கி தள்ளி நிறுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டவரிகளின் இரு வாகனங்கள் அங்கிருந்து சென்றது.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களின் வாகனம் 500 மீட்டர் தூரம் சென்ற போது பாஜகவை சேர்ந்த இரு நிர்வாகிகள் தங்களின் இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே நிறுத்தி கைது செய்யப்பட்டவர்களின் வாகனம் செல்ல வழி விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் போலீஸார் இருவரையும் கைது செய்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x