Published : 08 Nov 2018 10:09 PM
Last Updated : 08 Nov 2018 10:09 PM
தமிழகத்தை நோக்கி அடுத்த 4 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வர உள்ளதால், அது புயலாக மாறுமா அல்லது வலுவிழக்குமா என்பது குறித்து அடுத்துவரும் நாட்களில் தெரியும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 1-ம் தேதி தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. ஆனால், சில நாட்கள் மட்டுமே மழை இருந்த நிலையில் மீண்டும் சென்னை உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டு வருகிறது.
அதேசமயம், வங்கக்கடலில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒருசில பகுதிகள் மட்டும் கடந்த ஒருவாரமாக அவ்வப்போது மழையைப் பெற்று வருகின்றன. ஆனால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில்கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை காணப்பட்டு வருகிறது. இதனால் மழை இனிமேல் எப்போது பெய்யும் என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்துக்கு அடுத்த மழை எப்போது, வடகிழக்குப் பருவழை பொய்த்துவிட்டதா, எப்போது தீவிரமடையும் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜானிடம் எழுப்பினோம்.
அவர் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
''வடகிழக்குப் பருவமழை நவம்பர் 1-ம் தேதி தொடங்கிவிட்டபோதிலும் எதிர்பார்த்த மழை இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். அது தொடர்பாக பலரும் கருத்துகளை ஃபேஸ்புக்கிலும் தெரிவித்து வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு வாரம் மட்டுமே ஆகி இருக்கிறது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுமைக்கும் நமக்கு மழை தேவை அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால், ஒரு வாரத்துக்குள் மழை இல்லையே என எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டாம்.
கடந்த 2008-ம் ஆண்டில் நவம்பர் கடைசி வாரம் வரை மழையில்லாமல், நிஷா புயல் வந்து ஏராளமான மழையை நமக்குக் கொடுத்தது. 2015-ம் ஆண்டில்கூட நவம்பர் 8-ம் தேதி வரை மழையின்றி இருந்தது. ஆனால், அதன்பின் மழை அடுத்த 20 நாட்களில் அனைத்தும் மாறிப் போனது. ஆதலால், இப்போதே வடகிழக்குப் பருவமழை குறித்து எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டாம், மழை இல்லை என்று யாரும் எண்ண வேண்டாம். கடந்த ஒருவாரத்தில் பெரும்பாலான மழை நாகை முதல் கன்னியாகுமரி வரை மட்டுமே பெய்து வருகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் இன்னும் மழைக்கான காலம் இருக்கிறது. அடுத்த 4 முதல் 5 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கிவர உள்ளது. அந்தமான் நோக்கி நகரும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும் சாத்தியமும், தமிழகத்தை நோக்கி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தை நோக்கி வரும் போது, அது புயலாக மாறுமா அல்லது வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா, அல்லது வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுமா என்பது அடுத்துவரும் நாட்களில்தான் தெரியும். எப்படி வந்தாலும், மழை மேகங்களைக் கொண்டுவரும் அல்லது சில நேரங்களில் மழை இல்லாமல் காற்றாகக் கூட வரலாம்.
தென் மேற்கில் இருந்து வருவதால், மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், அதைக் கணிக்க சில நாட்கள் தேவைப்படும். அடுத்த சில நாட்களில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமா அல்லது தாழ்வுப் பகுதியா அல்லது புயலா என்பது தெரிந்துவிடும். வரும் 14-ம் தேதிக்குப் பின் இதன் தாக்கம் தெரியவரும்.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை வரை மழை நீடிக்கும். ஆனால், அதன்பின் தமிழகம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும். இதனால் மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். மழைக்கான வாய்ப்பு அடுத்து வரும் நாட்களில் அதிகமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் இருப்போம்''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT