Published : 24 Nov 2018 08:55 AM
Last Updated : 24 Nov 2018 08:55 AM
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கட்டி முடிக்கப்பட்ட பன்னடுக்குமாடி குடியிருப்புகளில் 82,600 வீடுகள் விற்கப்படாமல் இருப்பதால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், தனியார் கட்டுமான நிறுவனங்களும் புதிய வீட்டுவசதி திட்டங்களைத் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் ஏற்ற, இறக்கமாக உள்ளது. முன்புபோல, கறுப்பு பணத்தை ரியல் எஸ்டேட்டில் அதிக அளவு முதலீடு செய்ய முடிவதில்லை. தவிர, கட்டுமானச் செலவும் அதிகமாகிறது. இதனால், வீடுகளின் விலையை குறைத்து விற்க முடியாத நிலை நீடிக்கிறது. வங்கிக் கடன் பெறத் தகுதியானவர்கள் தவிர மற்றவர்கள் வீடு வாங்கத் தயங்குகின்றனர்.
நம்பிக்கை இல்லை
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகளும் ஏறக்குறைய தனியார் விற்கும் விலைக்கு இணையாகவே விற்கப்படுகின்றன. மேலும், வீட்டு வசதி வாரிய வீடுகளின் தரத்தின் மீது மக்களுக்கு இன்னமும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அவற்றை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.
இதுகுறித்து இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறியதாவது:
வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரிகள்: சென்னையில் உள்ள வீட்டுவசதி வாரிய கோட்டங்களில், எங்கு அதிக வீடுகள் விற்காமல் இருக்கிறதோ, அவற்றை விற்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த கண்காட்சியில் வீட்டுவசதி வாரிய வீடுகளின் விற்பனைக்காக அரங்கம் அமைக்கப்பட்டது.
ஜெ.ஜெ. நகர் கோட்டம் அம்பத்தூரில் குறைந்த வருவாய் பிரிவினருக்காக 19 மாடிகளுடன் 2,294 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 627 சதுர அடி கொண்ட ஒரு வீட்டின் விலை ரூ.22 லட்சத்து 50 ஆயிரம். இதில் மட்டும் 1,820 வீடுகள் விற்கவில்லை. அயப்பாக்கத்தில் 100, முகப்பேர் ஏரி திட்டத்தில் 19, வில்லிவாக்கத்தில் 510, சோழிங்கநல்லூரில் 100, கே.கே. நகரில் 11 வீடுகள் விற்கா மல் இருக்கின்றன. சென்னையில் சுமார் 3,100 வீடுகள் விற்பனை யாகவில்லை.
இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன சங்க கூட்டமைப்பின் (கிரெடாய்) சென்னை தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப்: தற்போதைய நிலவரப்படி வீட்டு மனை விலை குறையவில்லை. கட்டுமான செல வும் தொடர்ந்து அதிகரிக்கிறது. எனவே, வீடுகள் விலையைக் குறைத்து விற்க முடியவில்லை. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ரூ.30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் விலையுள்ள வீடுகள் விற்பனை பரவாயில்லை. இருப்பினும், ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான வீடுகளுக்கே வர வேற்பு உள்ளது. எனவே, சென் னையில் மட்டும் அடுத்த 3 ஆண்டு களில் இந்த விலையில் சுமார் 3 லட் சம் வீடுகள் கட்டப்படும்.
வீடுகள் விலை மேலும் குறை யும் என்ற எண்ணத்தில் வீடு வாங்குவதை மக்கள் தள்ளி வைக்கின்றனர். அதுபோல வீடுகள் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் புதிய வீடுகள் கட்டும் திட்டங்கள் தொடங்குவதை கட்டுமான நிறுவனங்களும் தள்ளி வைத்துள்ளன.
இந்திய கட்டுநர் வல்லுநர் சங்க மாநிலச் செயலாளர் எல்.சாந்தகுமார்: பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு கணிச மாக குறைந்துவிட்டது. வீடு விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பராமரிப்பு செலவு அதிகம் போன்ற காரணங்களால் இளம் தலைமுறை யினர் வீடு வாங்க ஆர்வம் காட்டுவது இல்லை. வீடு, மனையின் மதிப்பு அவ்வளவாக அதிகரிக்கவில்லை. பணக்காரர்கள் வீடுகள் வாங்கி வாடகைக்கு விடுவதும் அறவே குறைந்துவிட்டது.
இதன்காரணமாக, ஓஎம்ஆரில் (பழைய மகாபலிபுரம் சாலை) 33 ஆயிரம் வீடுகள், ஜிஎஸ்டி சாலையில் 17 ஆயிரம் வீடுகள், ஈசிஆரில் 8 ஆயிரம் வீடுகள், வட சென்னையில் 4 ஆயிரம் வீடுகள், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, ஒரகடம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பரவலாக 20,600 வீடுகள் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பன்னடுக்கு மாடி குடியிருப்புகளில் 82,600 வீடுகள் விற்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT