Last Updated : 17 Nov, 2018 07:53 AM

 

Published : 17 Nov 2018 07:53 AM
Last Updated : 17 Nov 2018 07:53 AM

காரைக்காலில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் வீசிய பலத்த சூறாவளியால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.

கஜா புயல் கடலூருக்கும் நாகப் பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகலுக்குப் பிறகு விட்டு விட்டு கனமழை பெய்தது. இரவு 8 மணிக்கு மேல் காற்று வீசத் தொடங்கியது. படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் 11 மணிக்கு மேல் மிகப் பலத்த காற்று வீசத் தொடங்கியது.

புயல் கரையை கடந்த நேற்று அதிகாலை 5 மணி வரை காற்றின் வேகம் குறையவில்லை. மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டது. இடையிடையே கன மழை பெய்தது. நேற்று அதிகாலை 5 மணிக்குப் பிறகு மெல்ல மெல்ல மழை அளவு குறைந்தது. நேற்று மாலை வரை மேக மூட்டத்துடன் வானம் இருந்தது. லேசான தூறல் விழுந்தது. புயல் கரையைக் கடந்த பின்னரும் மிதமான அளவில் காற்று தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தது.

பலத்த காற்று வீசிய நிலையில் கோட்டுச்சேரி, காரைக்கால் நகரம், திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக் கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. 2 மின் மாற்றிகள் முற்றிலும் சேத மடைந்தன. காரைக்கால் மீன்பிடி துறை முகம், பட்டினச்சேரி, கிளிஞ்சல்மேடு, காளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் பல, கடல் சீற்றத்தால் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பல படகுகள் பாதிக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம் தடைபட்டது. நேற்று இரவு வரை மின் விநியோகம் சீரடையவில்லை. நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப் பட்டிருந்த பெயர்ப் பலகைகள் பெயர்ந்து விழுந்தன. பல முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து கிடந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x