Published : 18 Nov 2018 08:17 AM
Last Updated : 18 Nov 2018 08:17 AM

திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் ‘கஜா’ புயலுக்கு 50 ஏக்கர் பசுமை குடில்கள் சேதம்: ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை

மதுரை, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உயர் ரக காய்கறிகள், மலர்கள் சாகுபடி செய்வதற்காக அமைக்கப்பட்ட பசுமை குடில்கள் (Green House) கஜா புயலுக்கு காற்றில் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மற்றும் மதுரை போன்ற மாவட்டங் களில் பெரும் விவசாயிகள் உயர் ரக மலர்கள், காய்கறிகளை ‘பசுமை குடில்’ முறையில் பயிரிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் இம் முறையில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ‘கஜா’ புயல் திண்டுக்கல்லை கடந்தபோது பலத்த காற்று வீசியது. இதில், திண்டுக்கல் மட்டுமின்றி, அதன் அருகில் உள்ள மதுரை மாவட்டமும் பாதிக்கப்பட்டது. மதுரையில் பப்பாளி, வாழை, தென்னை மற்றும் கரும்பு பயிர்கள் 300 ஏக்கருக்கு சேதமடைந்தன. இந்த புயல் காற்றுக்கு விவசாயப் பயிர்கள் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாயிகள் அமைத்து இருந்த பசுமை குடில்கள் முற்றிலும் சேதமடைந்தன. காற்றில் கிழிந்தும், கம்பிகள் கீழே சாய்ந்தும் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புவதற்காக பெரும் பொருட் செலவில் இந்த பசுமை குடில்களை அமைத்து காய்கறிகள், மலர்களை உற்பத்தி செய்து வந்தனர். இந் நிலையில், பசுமை குடில்கள் சேதமடைந்திருப்பதால் கடும் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த விவசாயி ராம்குமார் கூறியதாவது:

மற்ற பயிர் சாகுபடி முறையில் பலத்த காற்று வீசினால் பயிர்கள் மட்டும்தான் சேதமடையும். ஆனால், பசுமை குடில் முறை யில், பயிர்களை விட பல லட்சம் மதிப்புள்ள பசுமை குடில் கட்டமைப்புதான் அதிக சேதமடையும். ஒரு ஏக்கரில் பயிர் சாகுபடி செய்ய அமைக்கப்படும் பசுமை குடிலுக்கு ரூ.35 லட்சம் செலவாகும். தற்போது மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் 50 ஏக்கர் பசுமை குடில்கள் சேதமடைந்துள்ளன.

சுமார் ரூ.10 கோடி வரை விவசாயிகள் நஷ்டமடைந்துள்ள னர். இதில், மதுரையை விட திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் போன்ற இடங்களில் இருந்த அனைத்து பசுமை குடில்களும் அழிந்துவிட்டன. மதுரை மாவட்டத்தில் வரிச்சூர், ஒத்தக்கடை அருகே இருந்த பசுமை குடில்கள் லேசான சேதமடைந்துள் ளன.

பலர் வங்களில் கடன் பெற்று பசுமை குடில்களை அமைத்திருந் தனர். அதனால், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த பசுமை குடில்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x