Published : 16 Nov 2018 07:27 PM
Last Updated : 16 Nov 2018 07:27 PM
டெல்டா மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சீற்றத்துடன் 'கஜா புயல்' தாக்கியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
நாகை, வேதாரண்யம் பகுதிகளை ‘கஜா’ புயல் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரை கடக்கும் போது, மணிக்கு 110 கி.மீ முதல் 120 கி.மீ வேகம் வரை காற்று வீசியது.
வர்தாவாக மாறிய 'கஜா புயல்'
குறிப்பாக அதிராமபட்டினத்தில் அதிகாலை 2.30 மணி அளவில் மணிக்கு 111 கி.மீ வேகத்திலும், நாகையில் 2.30 மணி அளவில் மணிக்கு 100கி.மீ வேகத்திலும், காரைக்காலில் 92 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.
கஜா புயலில் வீசிய காற்று கடந்த ஆண்டு சென்னையைத் தாக்கிய ‘வர்தா’ புயலுக்கு ஒப்பாக இருந்தது. கடந்த ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலின் போது, மீனம்பாக்கத்தில் 122 கி.மீ வேகத்திலும், நுங்கம்பாக்கத்தில் 114கி.மீ வேகத்திலும், எண்ணூரில் 89 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது. தமிழகத்தை உலுக்கிய புயல் மெல்ல கேரள நோக்கி நகர்ந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தை நோக்கி வந்த ‘கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்து, மத்திய மாவட்டங்களை வழியாகக் கேரளா நோக்கிச் செல்கிறது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களைக் கடந்து அரபிக் கடலுக்குள் செல்லும் போது வலுவிழந்த ஆழ்ந்த புயலாகச் செல்லும்.
தமிழகத்தைத் தாக்கி சேதப்படுத்திய ‘வர்தா’ புயலுக்கு அடுத்தார்போல், ‘கஜா’ புயலைக் கூறலாம். அதுமட்டுமல்லாமல், கடந்த 1993-ம் ஆண்டுக்குப்பின் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்த கடுமையான சேதங்களை விளைவித்தது ‘கஜா’ புயலாகும்.
டெல்டா மாவட்டங்களுக்குள் நுழைந்ததில் இருந்து ‘கஜா’ புயல் மிகவேகமாக நகர்ந்து சென்றது. நிலப்பகுதியைக் கடந்து, மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக, அரபிக்கடலில் சென்று ‘கஜா’ புயல் வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக மாறும்.
‘கஜா’ புயல் ஏறக்குறையத் தமிழகத்தை கடந்து விட்டதால், அதுபற்றிய வதந்திகளையும், மீண்டும் ‘கஜா’ வருகிறது என்பது போன்ற வீடியோக்களையும் நம்ப வேண்டாம்
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT