Published : 02 Nov 2018 10:30 AM
Last Updated : 02 Nov 2018 10:30 AM
தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு,கார வகைகளை தயாரிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புத்தாடைகள், பட்டாசு மற்றும் இனிப்புகளை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில சமூக விரோதிகள், கலப்பட மற்றும் சுகாதாரமற்ற இனிப்பு வகைகளை தயாரிக்க வாய்ப்புள்ளது. எனவே,இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார உணவுகளை தயாரிப்பவர்கள், மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் கண்டிப்பாக பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும். இனிப்பு கார வகைகள் தயாரிக்கும் இடம், சேமிக்கும் இடம் மற்றும் விற்பனை செய்யும் இடம் ஆகியவற்றை உறுதித் தன்மையுடனும் வர்ணம் பூசியும் தூய்மையுடனும் வைத்திருக்க வேண்டும். கட்டிடத்தில் முறையான கழிவு நீர் வசதிகள், புகை போக்கிகள் இருக்க வேண்டும். உணவு தயாரிக்கும் இடம் ஈக்கள் மொய்க்காவண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்.
இனிப்பு கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தும் நீரின் தரத்தினை அறிய பகுப்பாய்வு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இனிப்புகளில் செயற்கை வண்ணங்களை 100 பிபிஎம் அளவுக்கு மட்டுமே சேர்க்கலாம். கார வகைகளில் செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது.
இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து பேக்கிங் செய்து அனுப்பும் போது உணவு பொருளின் பெயர், தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், பேட்ச் எண்,தயாரிப்பாளர் முகவரி ஆகியவற்றை லேபிளில் தெளிவாக அச்சிட வேண்டும்.
இனிப்பு கார வகைகள் விற்பனை செய்ய வைக்கப்பட்டுள்ள தட்டுகளிலும் தயாரிக்கப்பட்ட தேதி, உட்கொள்ளும் காலம் ஆகிய தகவல்கள் இருக்க வேண்டும், இனிப்புவகைகளை பரிசுப் பொருளாக பேக்கிங் செய்து விற்பனை செய்யும்போது பாலில் செய்யப்பட்ட இனிப்புவகைகளை மற்ற இனிப்பு வகைகளோடு சேர்க்கக் கூடாது என்பனஉள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை உணவு பாதுகாப்பு துறை விதித்துள்ளது.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையின்போது கலப்பட பொருட்களை தடுத்து பாதுகாப்பான உணவு மக்களை சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, இனிப்பு, கார வகை தயாரிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுபாடுகளை மீறுவோர் மீதுஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுப்பது, நிறுவனத்துக்கு சீல்வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக, இந்த வார இறுதியில் இருந்து இனிப்பு, கார வகை தயாரிக்கும் இடங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். நுகர்வோரும் இனிப்பு, கார வகைகளை வாங்கும் போது தரமானதாக இல்லையென்றால் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT