Published : 18 Nov 2018 10:18 AM
Last Updated : 18 Nov 2018 10:18 AM
நாமக்கல் மாவட்டம் பரளி கிராமத்தில் கிடைத்த விஷ்ணு புத்தர் சிலையை சேலம் அருங்காட்சியகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிமு 563-483-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியவரான புத்தருக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த தியாகனூரில் பழமைவாய்ந்த புத்தர் சிலை உள்ளது. அச்சிலையை பாதுகாக்கும் வகையில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு, தற்போது மக்கள் வழிபடும் கோயிலாகவும் உள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பரளி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விஷ்ணு புத்தர் சிலை கடந்த அக்டோபர் மாதம் கண்டெடுக்கப்பட்டது. தமிழகத்தில் முதன் முறையாக இங்கு தான் விஷ்ணு புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சேலம் அரசுஅருங்காட்சிய காப்பாட்சியர் முல்லை அரசு கூறியதாவது:
விஷ்ணுவின் தச அவதாரங்களில் விஷ்ணு புத்தர் 9-வது அவதாரம் என பாகவதம் என்ற நூல் கூறுகிறது. சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் முதன் முறையாக விஷ்ணு புத்தர் சிலை இப்போது தான் கிடைத்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் விஷ்ணு புத்தர் சிலை கிடைத்ததாக தெரியவில்லை.
பரளி கிராமத்தில் கிடைத்த விஷ்ணு புத்தர் சிலையானது, புத்தரை அடையாளப்படுத்தும் தவக் கோலத்திலும் தோள்களில் சங்கு, சக்கர சின்னங்களுடன் காணப்படுகிறது. 95 செமீ உயரமும், 65 செமீ அகலமும் கொண்ட இச்சிலையானது 9-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் மக்களின் வழிபாட்டுக்காக இந்த சிலை செதுக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சிலையை சேலம் அரசுஅருங்காட்சியகத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் விஷ்ணு புத்தர் சிலை சேலத்துக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT