Published : 08 Nov 2018 05:39 PM
Last Updated : 08 Nov 2018 05:39 PM
கோவையில் சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர், அங்கிருந்த போஸ்டர்களைக் கிழித்து எறிந்ததால் பரபரப்பு நிலவியது.
நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. இந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துகள் தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
இந்தப் படத்தில் அரசின் இலவசத் திட்டங்களை விமர்சனம் செய்திருப்பதாகவும், வில்லி கதா பாத்திரத்துக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சர்கார் திரைப்படத்தைக் கண்டித்தும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் அந்தப் படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்கு முன் அதிமுகவினர் இன்று (வியாழக்கிழமை) போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரேயுள்ள திரையரங்கு முன் பிற்பகல் கூடிய 30-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். திடீரென சிலர் திரையரங்கு முன் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் மற்றும் பேனர்களைக் கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அதிமுகவினரைச் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இந்தப் பிரச்சினை நடந்துகொண்டிருந்த நிலையில், திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT