Published : 20 Aug 2014 11:12 AM
Last Updated : 20 Aug 2014 11:12 AM
ஆவடியை அடுத்த பட்டா பிராமில், மத்திய அரசுக்கு சொந்த மான இந்திய உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கு (எப்.சி.ஐ.,) உள்ளது. சுமார் 85 ஏக்கர் பரப்பள வில் 70 கிடங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. அதில், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.
சென்னை மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப் பட்டு, பொதுமக்களுக்கு விநி யோகிக்கப்படுகிறது. இங்கு சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களில் இருந்து வண்டுகள் உற்பத்தியாகின்றன. இந்த வண்டுகள் அங்கிருந்து வெளியேறி, கிடங்கைச் சுற்றி 2 கி.மீ., தூர சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் செல்கின்றன. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சடகோபன் தி இந்து விடம் கூறியதாவது:
இந்தக் கிடங்கில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களில் இருந்து மிகப் பெரிய வண்டுகள் உருவாகின்றன. தினமும் மாலை நேரத்தில் கிடங்கில் உணவுப் பொருட்கள் உள்ள மூட்டைகள் மீது மருந்து அடிக்கப்படுகிறது. அந்த
சமயத்தில் வண்டுகள் கூட்டமாக வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு படையெடுக்கின்றன. வீடுகளுக்குள் சென்று சமைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரில் விழுந்து விடுகின்றன. மேலும், நள்ளிரவு நேரத்தில் உறங்கும் குழந்தைகளின் காதில் புகுந்து விடுகின்றன. இதனால், குழந்தைகள் அலறி துடிக்கின்றனர்.
மேலும், இக்கிடங்கை ஒட்டியுள்ள சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் இரவில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை வண்டுகள் பதம் பார்க்கின்றன. குறிப்பாக, இருசக்கரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும், தற்போது மழைக்காலம் துவங்க உள்ளது. இதனால், கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் ஈரப்பதம் அதிகரித்து வண்டுகள் இனப்பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வண்டுகள் உணவுப் பொருட்களை நாசம் செய்து, அவற்றின் தரத்தை குறைத்து விட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, அவற்றை உண்ணும் மக்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த வண்டுகளின் தொல்லையை கட்டுப்படுத்த கிடங்கின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சடகோபன் கூறினார்.
இதுகுறித்து, இந்திய உணவுப் பொருள் கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் குமாரிடம் கேட்ட போது, “பட்டாபிராமில் உள்ள சேமிப்பிக் கிடங்கில், மூட்டைகளுக்கு மருந்து தெளிக்கும் போது அதில் இருந்து வண்டுகள் மற்றும் பூச்சிகள் வெளியேறாத வகையில் மருந்து அடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வண்டுகள் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT