Published : 17 Aug 2014 10:52 AM
Last Updated : 17 Aug 2014 10:52 AM
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வளாகத்தில் கருவாடு விற்பது விதிமீறல் என்பதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகம், தமிழ்நாடு குறிப்பிட்ட பொருள்களின் அங்காடி (அமைவிடம் முறைப்படுத்துதல்) சட்டம்-1996-ன்படி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சட்ட விதிமுறைகளின்படி பூ மார்க்கெட்டில் பூக்களை மட்டும், பழ மார்க்கெட்டில் பழங்களை மட்டும், காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.
சேவை அடிப்படையில் டீக்கடை, உணவகம் ஆகியவை நடத்தலாம். அதே நேரம், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், கோழி, ஆடு, மீன், கருவாடு போன்ற இறைச்சி வகைகளை மார்க்கெட் வளாகத்தில் விற்கக் கூடாது.
ஆனால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில் விதிகளை மீறி மளிகைக் கடைகள் நடத்தப்படுகின்றன. அங்கு பருப்பு, எண்ணெய், புளி உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. மேலும், வகை வகையான கருவாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கருவாடு விற்கப்படுவது சங்கடத்தை ஏற்படுத்துவதாக சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் புகார் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாகக் குழு அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காய்கறி மார்க்கெட்டில் கருவாடு விற்பது விதிகளின்படி தவறு. உடனடியாக எங்கள் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு செய்து, கருவாடுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT