Last Updated : 19 Nov, 2018 08:09 AM

 

Published : 19 Nov 2018 08:09 AM
Last Updated : 19 Nov 2018 08:09 AM

சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டது நாய் இறைச்சியா?- பின்னணி குறித்து தீவிர விசாரணை

ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது நாய் இறைச்சி என வெளியான விவகாரம் ஹோட்டலில் உணவருந்தும் அசைவ உணவு பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னையில் விற்கப்படும் ஆட்டு இறைச்சிகள் பெரும்பாலும் ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. உயிரோடு கொண்டு வரப்படும் ஆடுகள் பெரம்பூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கத்தில் உள்ள ஆடு தொட்டிகளில் வெட்டப்பட்டு சுத்தம் செய்த பின்னர் சாதாரண ஹோட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள்வரை சப்ளை செய்யப்படுகின்றன.

இதேபோல் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், ஆட்டு இறைச்சி என்ற பெயரில் கன்றுக் குட்டி, நாய் இறைச்சிகளும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், பல உணவகங்கள் அவற்றை வாங்கி பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகளும் முன்பு வைரலாக பரவின. அவை அனைத்தும் வதந்தி என ஒதுக்கப்பட்டன. இந்நிலையில்தான் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சென்னை வழியாக மன்னார்குடி செல்லும் ரயிலில் இருந்து அழுகிய நிலையில் 2,190 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் உடல் அமைப்பு, தோற்றம், வால்பகுதி உள்ளிட்ட அனைத்தையும் அடிப்படையாக வைத்து பார்த்தபோது பறிமுதல் செய்யப்பட்டவை நாய் இறைச்சி என கூறப்பட்டது.

ஆட்டிறைச்சி என்ற பெயரில் நாய் இறைச்சி ரயிலில் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்ட சம்பவம் உணவகங்களில் சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட இறைச்சி யாருக்கு? எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்ற முழுமையான விபரத்தை ரயில்வே போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

இந்தியாவில் நாயை கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, சட்ட விரோதமாக நாயை கொன்று அதை ஆட்டிறைச்சி என மோசடி செய்தவர்கள் யார்? அதன் பின்னணி என்ன என்பது பற்றி விசாரிக்க கோரி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரைவில் புகார் அளிக்க உள்ளனர். அதன்படி, ரயில்வே போலீஸார் அல்லது சட்டம் ஒழுங்கு போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

காரணம் என்ன?

சென்னையில் ஆட்டிறைச்சி கிலோ 600 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. சில ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இது கட்டுப்படியாகாததால் ஆட்டின் தோற்றத்தில் இருக்கும் நாய்களுக்கு வலை விரிக்கின்றனர். ராஜஸ்தான் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை சட்ட விரோதமாக வேட்டையாடி அதை அங்குள்ள சிலர் சென்னைக்கு ஆட்டிறைச்சி என்ற பெயரில் அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாய் இறைச்சியை கிலோ 100 ரூபாய்க்கும் குறைவாக வாங்கி, அதை ஓட்டல்களுக்கு கிலோ 300 ரூபாய் வரை விலை வைத்து சிலர் விற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஹோட்டல்களில் நாய் இறைச்சி பெறப்படுகிறதா? அந்த ஹோட்டல்கள் எவை என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர்.

ஹோட்டல்கள் விளக்கம்

தமிழ்நாடு ஹோட்டல்ஸ் அசோசி யேஷனின் தலைவர் எம்.வெங்கட சுப்பு இதுபற்றி கூறும்போது, “சென்னையில் சுமார் 50 ஆயிரம் ஹோட்டல்கள் உள்ளன. வாலுடன் வந்தால் மட்டுமே ஹோட்டல்களில் ஆட்டு இறைச்சிகளை ஏற்றுக் கொள்கிறோம். பொது மக்களைப்போல் ஹோட்டல் நிர்வாகிகளும் ஆட்டிறைச்சி என நம்பி வேறு இறைச்சியை வாங்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் தெரிந்தே நாய் இறைச்சியை வாங்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் ஓட்டல் நிர்வாகிகளும் அவர்களது ஹோட்டல்களில்தான் சாப்பிடு கின்றனர். நாய் இறைச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

சென்னையில் உள்ள ஆட்டிறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்வர் பாஷா குரைசி கூறும்போது, “ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் 500 முதல் ஆயிரம் ஆடுகள் வரை சென்னைக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன. பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக தேவை ஏற்படும். சென்னையில் அனுமதி இல்லாமல் பல ஹோட்டல்கள் இயங்குகின்றன. இவர்களில் யார் நாய் இறைச்சியை வரவழைத்து மோசடியில் ஈடுபடுகிறார்களோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சென்னையைச் சேர்ந்த கறிக்கடை உரிமையாளரான முகமது இஸ்மாயில் என்பவர் கூறும்போது, “கடைகளில் நேரடியாக இறைச்சி வாங்க செல்வோரிடம் ஆட்டிறைச்சி என நாய் இறைச்சியை ஏமாற்றி விற்க முடியாது. மொத்தமாக ஆர்டர் செய்யும் உணவகங்களுக்கு ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியை கலந்து அனுப்ப வாய்ப்புள்ளது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட பின்னர் 2 இறைச்சியும் ஒரே மாதிரியாக இருக்கும்" என்றார்.

அசைவ உணவு பிரியரான நீலாங்கரையைச் சேர்ந்த நீலமுத்து (35) என்பவர் கூறும்போது, “வார இறுதி நாளில் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று அசைவ உணவை விரும்பி சாப்பிடுவது வழக்கம். தற்போது எழுந்துள்ள விவகாரத்தால் ஹோட்டலில் சாப்பிடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

முகவரியில் குழப்பம்

சம்பந்தப்பட்ட இறைச்சியை ராஜஸ்தானில் இருந்து அனுப்பியவரின் முகவரியில் ஓரிடத்தில் முகமது உமர் என்றும் மற்றொரு இடத்தில் ஓஸ்மன் விதர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றுக் கொள்பவர் முகவரியில் ஒரு இடத்தில் ஏ.இசட் சென்னை என்றும் மற்றொரு இடத்தில் இம்ரான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனால் அவற்றை அனுப்பியவர் யார்? பெற்றுக் கொள்ள வந்தவர் யார்? என்ற முழு விபரத்தையும் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. இதில், ரயில்வே ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இறைச்சியை பறிமுதல் செய்தபோது அது தங்களுக்கு வந்ததுதான் என கூறி சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைமையில் சுமார் 20 வியாபாரிகள் திரண்டு உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால், ரயில்வே போலீஸார் அவர்களை கைது செய்யாமல் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கவில்லை. அவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியின் ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

ஆட்டிறைச்சி என்ற பெயரில் வேறு இறைச்சிகளை பயன்படுத்தும் ஹோட்டல் குறித்து உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சங்கத்தினர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இதன் மூலம் கலப்பட இறைச்சியை பயன் படுத்தும் ஹோட்டல்களை கண்டறிந்து, அவற்றை தவிர்த்து தரமான ஓட்டலில் உணவருந்தி உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என உணவு பிரியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x