Published : 22 Nov 2018 02:59 PM
Last Updated : 22 Nov 2018 02:59 PM
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வட மற்றும் தென் மாவட்டங்கள், கேரளாவின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
''புல் எஃபெக்ட் காரணமாகத் தமிழகத்தின் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கேரளாவின் சில பகுதிகளுக்கு அடுத்த இரு நாட்களுக்கு மழை இருக்கும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், திண்டிவனம், திருச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்காவது மழை இருக்கும். 23-ம் தேதியில் இருந்து வடமாவட்டங்களில் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
24-ம் தேதி மழை தென் மாவட்டங்களில் இருந்து மேற்கு மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும். வடதமிழகத்தின் வட்டங்களில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், கடற்கரை பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மட்டுமே 24-ம் தேதியில் இருந்து கிழக்கு காற்றின் மூலம் மழை பெய்யக்கூடும்.
புல் எஃபெக்ட் மூலம் இழுக்கப்படும் மேகக்கூட்டங்கள் தெற்கில் இருந்து தென்கிழக்காக மெதுவாக நகர்ந்து வருகிறது. அடுத்த மேகக்கூட்டங்கள் மகாபலிபுரம் நோக்கி நகர்கின்றன. இதுபோன்ற மழைதான் இடைவெளிவிட்டு நாளை நண்பகல் வரை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 350 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்னும் இயல்பு மழை அளவான 850 மி.மீ. எட்டுவதற்கு இன்னும் 500 மி.மீ. மழை பெய்ய வேண்டும்.
மேலும் நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை பெய்துள்ளது.
சோழவரம் ஏரி 120 மி.மீ, மாதவரம் 119 மி.மீ, ரெட்ஹில்ஸ் ஏரி 106 மி.மீ, செய்யூர் 103 மி.மீ, கும்மிடிப்பூண்டி-100 மி.மீ, பொன்னேரி-97 மி.மீ, எண்ணூர் 96 மி.மீ, நுங்கம்பாக்கம்94 மி.மீ, டிஜிபி மெரினா 93 மி.மீ, புழல் 91 மி.மீ, மீனம்பாக்கம் 87 மி.மீ, கிண்டி 85 மி.மீ, தாமரைப்பாக்கம் 83 மி.மீ, சத்தியபாமா பல்கலை 60 மி.மீ, அயனாவரம் 59 மி.மீ, மதுராந்தகம் 58 மி.மீ, அம்பத்தூர் 53 மி.மீ, ஆலந்தூர் 56 மி.மீ, செங்கல்பட்டு 50 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT