Last Updated : 22 Nov, 2018 03:30 PM

 

Published : 22 Nov 2018 03:30 PM
Last Updated : 22 Nov 2018 03:30 PM

கஜா புயலில் 5 ஏக்கர் தென்னையும் போச்சே: விரக்தியில் விஷம் அருந்தி விவசாயி தற்கொலை

கஜா புயலில் 5 ஏக்கரில் நடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (57). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 5 ஏக்கரில் தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார். இதன்மூலம் வருடத்துக்கு இரு முறை தேங்காய்களைப் பறித்து தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி வீசிய 'கஜா' புயலினால் சுந்தரராஜின் தென்னந்தோப்பில் உள்ள 400 தென்னைமரங்கள் அடியோடு சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு ஏக்கரில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களும் சேதமாகின.

இதனால் கடந்த நான்கு நாட்களுக்கும் மேல் விரக்தியில் இருந்த அவர் இன்று (வியாழக்கிழமை) காலை விஷம் குடித்து சுடுகாடு அருகே இறந்து கிடந்தார்.இன்று காலை அப்பகுதியில் சுந்தரராஜை தேடிச் சென்றவர்கள் அவரின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் அவருடைய சடலத்தை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்து வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாப்பாநாடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இறந்து போன சுந்தர்ராஜுக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், சுதாகரன் என்ற மகனும், சுதா என்ற மகளும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x