Last Updated : 15 Nov, 2018 06:32 PM

 

Published : 15 Nov 2018 06:32 PM
Last Updated : 15 Nov 2018 06:32 PM

தீவிரமடைகிறது கஜா புயல்; கரை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

'கஜா' புயல் கரையைக் கடக்கும் போது வலுவிழக்கும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'கஜா' புயல் தீவிரமடைந்து வருகிறது. கடலூர், வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

அதிகபட்சம் 120 கி.மீ. வேகம்

தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் 'கஜா' புயல் வலுவிழந்து கரையைக் கடக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது தீவிரமடைந்து வரும் 'கஜா' புயல் வர்தா புயலுக்கு இணையாக மாறுகிறது. கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே 'கஜா' புயல் இன்று நள்ளிவரவு கரையைக் கடக்கும் போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும்.

குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்கள் 'கஜா' புயலால் மிகுந்த விழிப்புடன், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 'கஜா' புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே 'கஜா' புயல் கரை கடக்க வாய்ப்புள்ளது.

அதிகாலை

'கஜா' புயல் நகர்ந்துவரும் போது, அடர்த்தியான மேகக்கூட்டங்களோடு நகர்ந்து வருகிறது. எதிர்பார்க்கப்பட்டதுபோல் பலவீனமடையாது. மாறாக, மிகுந்த தீவிரத்தோடு கரை கடக்கும். தற்போது தமிழகக் கடற்கரையில் இருந்து 150 கி.மீ. முதல் 175 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மணிக்கு 25 கி.மீ. முதல் 30 கி.மீ. வேகத்தில் 'கஜா'  புயல் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினம் பகுதியில் 'கஜா' புயல் கரையைக் கடப்பதற்கு இன்னும் 6 மணிநேரம் ஆகலாம். அதாவது 16-ம் தேதி அதிகாலை (நாளை) 'கஜா' புயல் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து கரை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரை கடக்கும்போது..

bandspngபடம் உதவி: பேஸ்புக்100 

'கஜா' புயல் கரை கடக்கும்போது, ஏறக்குறைய 3 மணிநேரம் முதல் 4 மணிநேரம் வரை எடுத்துக்கொள்ளும். முதலில் திருவாரூர் மாவட்டத்தில் காற்று வடமேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும், அதன்பின் காற்று தென்கிழக்காக வீசத்தொடங்கும்.

'கஜா'  புயல் கரையைக் கடக்கும் நடுப்பகுதியில் காற்று வீசும் திசை மாறக்கூடும். அப்போது சூழல் மிகுந்த அமைதியாக இருக்கும். அதனால், புயல் கரை கடந்துவிட்டது என்று எண்ணிவிடக்கூடாது. தென்கிழக்கில் இருந்து வரும் காற்று முழுமையாக நின்றுவிட்டதை மரங்கள் வேகமாக அசைவது நின்றுவிட்டதை வைத்துமுடிவு எடுக்கலாம்.

கடலூர் மற்றும் டெல்டா பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்து சென்ற புயல் குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன.

1. 2011-ம் ஆண்டு தானே புயல் கடலூரைக் கடந்து சென்று. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

2.  2008-ம் ஆண்டு நிஷா புயல் காரைக்கால் பகுதியைக் கடந்தது. அப்போது, மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. ஒரத்தநாடு பகுதியில் 24 மணிநேரத்தில் 657 மி.மீ. மழை பதிவானது.

3.  2000-ம் ஆண்டில் நிஷா புயல் கரை கடந்தது. அப்போது கடலூர் பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. தொழுதூரில் 454 மி.மீ. மழை பதிவானது.

4.  1993-ம் ஆண்டு காரைக்கால் புயல் கரை கடந்தது. காரைக்காலில் 167 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

5.  1991-ம் ஆண்டு காரைக்கால் புயலின் போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

6.  இந்த 'கஜா'  புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிகத்தீவிரமான மழை பெய்யும்.

கனமழை பெய்யும் இடங்கள்

ராமநாதபுரம், திருச்சி, கடலூர், விருதுநகர், மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களான கோவை, வால்பாறை ஆகியவற்றிலும் கன மழை பெய்யும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x