Published : 07 Nov 2018 01:37 PM
Last Updated : 07 Nov 2018 01:37 PM
இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால், தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''இலங்கைக்கு அருகே தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது, ஆனால், இது வலிமையானதாக இல்லை. இதனால், அதிகமான காற்றோ அல்லது கடலில் உயரமான அலைகளோ உருவாகும் என்று எதிர்பார்க்க முடியாது. சரியாகச் சொல்ல வேண்டுமானால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிதான். இதை காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றுகூடக் கூற முடியாது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 10-ம் தேதிக்குள் வலுவிழுந்துவிடலாம். ஆதலால், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் புயல் உருவாவதற்கு வாய்ப்பில்லை, கடல் பகுதி முழுமையாகப் பாதுகாப்பாகத்தான் இருக்கும். இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியை நினைத்து கவலைப்படத் தேவையில்லை.
ஆனால், இந்தக் குறைந்த காற்றழத்த தாழ்வுப் பகுதியால், அடுத்த 3 நாட்களுக்கு(9-ம்-ம் தேதிவரை) தென் மாவட்டங்களிலும், 8-ம் தேதிவரை டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர் வரையிலும் பரவலாக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8-ம்தேதி அன்று புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை பரவலாக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 8-ம் தேதி கனமழை பெய்யும்.
மற்ற மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலையே காணப்படும். அவ்வப்போது நகரின் ஏதாவது ஒரு பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம். இந்த வடகிழக்குப் பருவமழையில் அவ்வப்போது திடீர் மழை பெய்வதுதான் இயல்பு. 8-ம் தேதி பெய்யும் மழை புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை பரவலாக இருக்கும். அந்த மழையால், சென்னையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம்.
இப்போது நவம்பர் மாத நடுப்பகுதியில் மழையை எதிர்பார்க்கிறேன். கடந்த வாரத்தில் இருந்து நான் கூறிவருவதுபோல், தமிழக கடற்கரையை நோக்கி ஒரு புயல் நகர்ந்து வருகிறது. ஆனால், அது குறித்து இப்போதே கணித்துக் கூறுவது கடினம். தாய்லாந்து வளைகுடா பகுதியில் உருவாகி இருக்கும் புயலுக்கு சாதகமான சூழல் அமைந்தால் தமிழகத்தை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மீனவர்களுக்காக..
இலங்கைக்கு அருகே உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அச்சமடைய வேண்டாம். இது மிக, மிக, வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி. அந்தமான் நிகோகர் தீவுப்பகுதிக்கு அருகே அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி நகர்ந்து வருவதால், 10-ம் தேதியில் இருந்து தமிழக வங்கக்கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் இருக்கும்''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT