Published : 01 Nov 2018 08:37 AM
Last Updated : 01 Nov 2018 08:37 AM
பட்டாசுகளை கவனக் குறைவாக வெடிப்பதால் தீ விபத்துகளும், தீக்காயங்களும் ஏற்படுவதுடன், ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியுள்ளது.
குடும்பங்களில் அனைவரும் இன்புற்று இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான் பண்டிகைகளும், விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக் கால மகிழ்ச்சிக்காக, வெளியூர்களில் வேலை செய்வோர், குடும்பத்துடன் பஸ்ஸைப் பிடித்தும், ரயிலைப் பிடித்தும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியும் சொந்த ஊர் வந்து சேரும் வரை அவர்கள் படும் சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
ஊருக்கு புறப்பட்டுச் செல்வதில் சிரமங்கள் இருந்தாலும், சொந்த ஊரில், உற்றார், உறவினர், சிறு வயதில் உடன் படித்த நண்பர்கள், மழலைக் காலத்தில் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு பட்டாசு வாங்கச் சென்ற மளிகைக் கடை போன்றவற்றைப் பார்க்கும்
போது, அனைத்து சிரமங்களும் பறந்துபோய் மகிழ்ச்சி பொங்குகிறது. இது தான் உண்மையான, அளவற்ற தீபாவளி மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனால், பண்டிகை கொண்டாட்டம் என மிகுந்த ஒலியை எழுப்பும் பட்டாசு வகைகளை, கவனக்குறைவாக குழந்தைகளை வெடிக்கச் செய்யும்போது விபத்துகளும், காயங்களும் ஏற்பட்டு மகிழ்ச்சி பறிபோகிறது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய கொண்டாட்டத் தருணத்தில் பல குடும்பங்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தொலைக்கின்றன. அதிலும் உடலில் நிரந்தர பாதிப்பு என வரும்போது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பறிபோகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கவனக்குறைவாகவும், தரக்குறைவான பட்டாசுகளை வெடிக்கும்
போதும்தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சாகுல் அமீது கூறியதாவது:
பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் அதிகமாகக் காயமடைகின்றனர். பெரும்பாலான விபத்துகளில் குழந்தைகள் கண் பார்வையை இழக்க நேரிடுகிறது. பட்டாசு விபத்துகளைத் தடுக்க அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை பெற்றோர் முன்னிலையில் மட்டும்தான் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்
டும். எப்போதும் ஒரு வாளியில் நீர் நிரப்பி அருகில் வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது ஆடையில் தீப்பற்றினால் ஓடக்கூடாது. அதன் மீது நீரை தெளித்தோ, தரையில் படுத்து புரண்டோ தீயை அணைக்க வேண்டும்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது கட்டாயம் ஷூ அணிந்திருக்க வேண்டும். மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றைக் கடைபிடித்தால் விபத்துகள் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் ஜெ.ஜெகன் மோகன் கூறியதாவது:
பட்டாசுகளை கவனமாக கையாளாவிட்டால் அனைத்துமே ஆபத்தை விளைவிக்கக்கூடியவைதான். பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளில் கை விரல்களை இழப்போர் அதிகமாக உள்ளனர். சிலர், ஆடையில் தீப்பற்றி காயமடைகின்றனர். இது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. மத்தாப்பு மற்றும் புஸ்வாணம் போன்றவற்றை கொளுத்தும்போது தீப்பொறி பட்டு கண் பாதிக்கப்படுகிறது.
எனவே, குடும்பங்களில் தீபாவளி மகிழ்ச்சி நிலைத்திருக்க கைகளில் பிடித்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. கதர் ஆடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT