Published : 12 Nov 2018 08:48 AM
Last Updated : 12 Nov 2018 08:48 AM
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தானத்தினர் தரிசன ஏற்பாடுகள் செய்து, தீர்த்த பிரசாதம் கொடுத்து கவுரவித்தனர்.
பின்னர் அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ஏழுமலையானை வேண்டிக் கொண்டேன். 2019-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். மோடியின் கரங்களை பலப்படுத்த தமிழகத்தில் கிராம அளவில் பாஜக வலுப்படுத்தப்படும்.
வரும் 15-ம் தேதி தமிழகத்தின் 20 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளேன். ‘சர்கார்’ திரைப்படம் சென்ஸார் செய்து வெளிவந்துள்ளது என்பது உண்மை. ஆனால், சென்ஸார் செய்தும் பல படங்கள் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. நடிகர்கள் எல்லாம் அரசியல் குறித்து பேசுகிறார்களே தவிர, அவர்களது துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.
கர்நாடக இடைத்தேர்தல் முடிவால் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சந்திரபாபு நாயுடு ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது போல் மாயையை உருவாக்க பார்க்கிறார். ஏற்கெனவே காங்கிரஸ், தேவகவுடா ஆகியோர் தனித்துதான் இயங்குகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்ததால் எந்தவொரு புதிய கூட்டணியும் உருவாகாது. சந்திரபாபு நாயுடு ஆந்திரா மக்களை ஏமாற்றி வருகிறார்.
சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி கொடுத்தும், அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை இதுவரை அவர் மக்களுக்கு எடுத்து கூறவில்லை. காங்கிரஸ் கட்சியை எதிர்த்துதான் தெலுங்கு தேசம் உருவானது. ஆனால், தற்போது மக்களை ஏமாற்றி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார். இதன் மூலம் தனது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும் ஆந்திரா மக்களுக்கும் சந்திரபாபு நாயுடு துரோகம் இழைக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடுமா என்பது குறித்து விரைவில் தேசிய தலைவர் அமித் ஷாவுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT