Published : 31 Oct 2018 03:16 PM
Last Updated : 31 Oct 2018 03:16 PM

‘கொடியவன் நரகாசுரனுக்கு கொண்டாட்டமா?’- கோவையில் புறக்கணிப்பு தீபாவளி

கடவுள் இல்லை என்பது கடவுள் மறுப்பு. தீபாவளி புறக்கணிப்போம் என்பது தீபாவளி மறுப்புதானே? அதையும் ஒரு கொண்டாட்டமாக நரகாசுரனுக்கு வீர வணக்க நாளாக கோவையில் நடத்தி வருகிறார் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரான கு.ராமகிருஷ்ணன்.

பகுத்தறிவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் இங்குள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைமை நிலையத்தில் கூடி, அசைவ விருந்தால் ஒரு கலக்கு, கலக்குகிறார்கள். இந்த ஆண்டும் ‘தீபாவளியைப் புறக்கணிப்போம்’ கோஷத்தோடு போஸ்டர்கள், நோட்டீஸ்கள் கோவை வீதிகளில் வலம் வருகின்றன. கொண்டாடுபவர்கள் பெரியாரிய தோழர்கள் என்பதனாலேயே, ‘ஆரிய எதிர்ப்பையும், திராவிடம் ஆதரவையும் சொல்லி அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்!’ என்று ஒற்றை வரியில் புறந்தள்ளி விட்டுப் போகலாமா? கூடாதுதானே? ‘இந்த நான்காண்டு கால தொடர் நிகழ்வின் மூலம் நீங்கள் பெற்ற அனுபவம்தான் என்ன?’ என்ற கேள்வியுடன் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன்.

‘‘நரகாசுரன்- கண்ணன் கதை கற்பனைதான். ஓர் இனத்தை இழிவுபடுத்தி இன்னொரு இனத்தை மேன்மைப்படுத்தி கொஞ்சம் கூட லாஜிக்கில்லாமல் புனையப்பட்டது!’’ என பெரிய செருமல் செருமிக் கொண்டு, ‘ஹலோ மைக் டெஸ்டிங்’ சொல்லாத குறையாகப் பேசத் தொடங்கினார்.

‘மக்களைத் துன்புறுத்தி வந்த அசுரன் பூமியைப் பாயாக சுருட்டிக்கொண்டு கடலில் போய் ஒளிந்து கொள்கிறான். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, அவர் பன்றி அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்து அசுரனை வதம் செய்து கடலிலிருந்து பூமியை மீட்டு வருகிறார். விஷ்ணுவின் ஸ்பரிசத்தால் பூமாதேவி நரகாசுரனைப் பிறப்பிக்கிறாள். அவனை விஷ்ணு வதம் செய்கிறார். நரகாசுரன் தான் செத்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வரம் கேட்டதாகவும், அந்த நாளையே காலம் காலமாக தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். வானியல் ஆய்வோ, பூகோள அறிவோ துளியும் இல்லாது பூமி தட்டை, கடலும், நிலமும் வேறு வேறு என மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் புனையப்பட்ட ஒரு கதையை வைத்து இன்னமும் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடரான அசுரனை, தேவர்களின் அவதார புருஷனான விஷ்ணு வதம் செய்து கொல்வதை திராவிட இனத்தவரே மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது அடுத்த வேடிக்கை.

‘‘இது கதையாகவே இருக்கட்டும். கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே. பூமி கடவுள்; பன்றி உருவமெடுத்த விஷ்ணுவும் கடவுள். அவர்களுக்குப் பிறந்த குழந்தை மட்டும் எப்படி அசுரனாக பிறக்க முடியும் என்று பெரியாரே கேட்டுள்ளார். அப்படியும் இந்த மக்கள் தீபாவளியை விட்டொழிக்கவில்லை. அதன் கொண்டாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. அதைத் தவிர்க்க மக்களிடம் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இதை ஆரம்பித்தோம். கதைப்படியே பார்த்தாலும் திராவிட மக்களுக்கு, நரகாசுரனும் திராவிடன் எனப்படும்போது அவன் ஒரு மூதாதையே. ஒரு மூதாதை இறந்ததை நினைவஞ்சலி நிகழ்ச்சியாகவே செய்யலாம். நரகாசுரனுடையது இயல்பு மரணம் அல்ல. சூழ்ச்சிமிகு போரில் வீரமரணம். எனவே அதை வீர வணக்க நாளாகவே எடுப்போம் என முடிவு செய்தோம். நான்கு வருடங்களுக்கு முன் இதைப் பொது வெளியில் கொண்டாட முயற்சித்தோம். போலீஸ் அனுமதிக்கவில்லை. அதனால் எங்கள் தலைமையிடத்திலேயே வைக்கிறோம். ஆரம்பத்தில் ஐம்பது அறுபதுபேர் தான் கூடினார்கள். பிறகு இருநூறு, முன்னூறு பேர் ஆச்சு. இந்த ஆண்டு எப்படியும் நானுாறு பேர் வரலாம்!’’

என்றவரை, ‘வீர வணக்க நாளாக இதை அனுஷ்டிப்பு செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே? இதில் எதற்கு அசைவ விருந்து எல்லாம் போட வேண்டும். அல்லது வெறுமனே இந்தப் பண்டிகையை பகுத்தறிவாளர்கள் புறக்கணித்து விட்டுப் போக வேண்டியதுதானே?’ என்ற கேள்வியால் இடைமறித்தேன்.

‘‘எங்களுடைய நோக்கம் இதை மக்கள் ஒருமித்த முடிவோடு புறக்கணிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் மக்கள் இதை தீபாவளி கதையையும் புரிந்து கொள்ளாமல், தன் வாழ்நிலையையும் உணர்ந்து கொள்ளாமல் புதுத்துணி அணிந்து, பட்டாசு, பலகாரம், விருந்து சாப்பாடு என அதிலேயே மூழ்கி நிற்கிறாங்க. வருஷம் பூரா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, அதனால வரக்கூடிய போனஸ் என்கிற தொகையைக் கூட தன் எதிர்கால வாழ்க்கைக்குன்னு பத்திரப்படுத்திக்காம, அதை பட்டாசு, மத்தாப்பு, புதுத்துணின்னு ஒரே நாள்ல காலியாக்கிடறாங்க. இதனால நடுத்தரவாசி ரொம்ப அவதிப்படறான். அதை விட கூலிக்கார மக்கள் வெகுவாகவே சிரமப்படறாங்க. அதை உடைக்கணும்னா எதிர்வினையை சரியாச் செய்யணும். வெறுமனே புறக்கணிப்புன்னு போஸ்டர் ஒட்டினா மட்டும் இந்த மக்கள் விழிப்புணர்வு பெறும் சூழலில் இல்லை. அதனாலதான் அதற்கு நேர் எதிர்வினையா‘நரகாசுரனுக்கு வீரவணக்கம்’செய்யறோம். அது இப்போ சமூக வலைத்தளங்கள் வந்த பின்னாடி பலதரப்பட்ட மக்களையும் போய்ச்சேருது. ‘கொடியவன் நரகாசுரன். கொடியவனுக்கு வீர வணக்கம் செய்து எதற்காக கொண்டாட வேண்டும்?’ என வயசானவர்கள் கூட கேட்கிறார்கள்.

இப்படியான விவாதங்கள் வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கும் பொறுப்பாக பதிலும் சொல்கிறார்கள் தோழர்கள். இதைப் பார்த்து இன்னும் சில இயக்கங்கள் புறக்கணிப்பு தீபாவளி, நரகாசுரனுக்கு வீர வணக்கம் நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்துள்ளார்கள். தவிர இன்றைக்கு சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதுகாப்பின் பெயரால் பசுமை தீபாவளி, பட்டாசுகள் கொளுத்தக் கூடாதுபோன்ற விஷயங்கள் மக்களிடையே விழிப்புணர்வைக் கொடுத்து வருகிறது’’என்றார் கு.ராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x