Published : 07 Oct 2018 02:37 AM
Last Updated : 07 Oct 2018 02:37 AM

உணவு உற்பத்தி, பொருளாதாரம் குறித்து கணக்கிட தமிழகத்தில் கால்நடைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

தேசிய அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை, அவற்றின் மூலமானஉணவு உற்பத்தி, பொருளாதாரம் குறித்து கணக்கிட, கால்நடைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை, அவற்றின் மூலமான உணவு உற்பத்தி, பொருளாதாரம் போன்றவற்றை  கணக்கிட, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். கடந்த 2013-ல்,19-வது தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, 20-வது தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறை இந்தப் பணியை மேற்கொள்கிறது.

இதற்காக, கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள், கருவூட்டல் பயிற்சி பெற்றவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் ஆகியோர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் பசு, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, ஆடு, கோழி, வான்கோழி, வீடுகளில் வளர்க்கப்படும் நாய், தெரு நாய், குதிரை, பன்றி போன்றவை தனித்தனியாக கணக்கிடப்படும். கால்நடைத் தொழிலில் பயன்படுத்தப்படும் தானியங்கி பால் கறவை இயந்திரம், தானியங்கி தீவனப் பயிர் வெட்டும் கருவி, பயிர் அறுக்கும் மற்றும் கட்டும் கருவி, தானியங்கி சாணச் சேகரிப்பு மற்றும் அப்புறப்படுத்தும் கருவிகள் போன்றவற்றின் எண்ணிக்கை விவரங்களும்  அடங்கும்.

வீடு, வீடாகச் சென்று கால்நடை வளர்ப்போர், விற்பனையாளர் ஆகிய விவரங்கள் கணக்கிடப்படும்.

இப்பணியில், 4,000 மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு ஒரு குழுவினர் என்கிற  வகையில், பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி என தனித்தனியாக விவரம் சேகரிக்கப்படும். கடந்தமுறை, அச்சிடப்பட்ட தாள்கள் மூலம் கணக்கிடப்பட்டது. தற்போது, கையடக்க கணினி மூலம் கணக்கீடு செய்து, அன்றைய விவரங்கள் உடனடியாக இணையத்தில் பதிவேற்றப்படும். இதன்மூலம் கால்நடைகளின் எண்ணிக்கை உயர்வு, சரிவு, கட்டுப்படுத்தப்பட வேண்டியவை, அதிகமாக வளர்க்கப்பட வேண்டியவை குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கான திட்டம் அரசால் அறிவிக்கப்படும். தொடர்ந்து, 3 மாத காலம்நடைபெற உள்ள இக்கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்களும், விவசாயிகளும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி வரும் டிசம்பர் மாதம் வரை கையடக்க கணினி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 156 கால்நடை கணக்கெடுப்பாளர்களும், 30 மேற்பார்வையாளர் களும், 5 தணிக்கை அலுவலர்களும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர். கணக்கிடப்படும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்துகள், தடுப்பூசிகள் வழங்கவும் மற்றும் எண்ணிக்கை குறைவான கால்நடை இனங்களைக் கண்டுபிடித்து அவற்றை அதிகரிக்க திட்டமிடுவது உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் பயன்பெற பொதுமக்கள்  ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.  தமிழக அரசு சார்பில் கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் பொருளாதாரம் மேம்பட, விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதால், தமிழகத்தில்கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்கணக்கெடுப்பு புள்ளி விவரம், அரசு, கொள்கை முடிவெடுக்கவும், விவசாயிகளுக்கு நலத் திட்டங்கள் அறிவிக்கவும் உதவியாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x