Last Updated : 07 Oct, 2018 01:48 AM

 

Published : 07 Oct 2018 01:48 AM
Last Updated : 07 Oct 2018 01:48 AM

போதிய அளவு சணல் சாக்குகள் இல்லாததால் கொள்முதல் செய்ய முடியாமல் பல ஆயிரம் டன் குறுவை நெல் தேக்கம்: மழையில் நனைந்து முளை விடுவதால் விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான சாக்குகள் போதியளவு இல்லாததால் நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில், கொள்முதல் நிலையங்களில் பல ஆயிரம் டன் நெல் தேங்கியுள்ளது. மழையில் நனைந்து நெல் மணிகள் முளை விடுவதால் விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடியாக 36 ஆயிரம் ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டு, இந்த நெல் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

குறுவை சாகுபடி தீவிரமான நடைபெறும் அக்டோபர் மாத தொடக்க முதலே தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலை

யில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்திருந்தனர். தற்போதுமழையில் நனைந்து நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டாலும் நெல்லை கொள்முதல் செய்ய போதிய சணல் சாக்குகள் இல்லை என கொள்முதல் பணியாளர்கள் தெரிவிப்பதால் திறந்தவெளியில், பாதுகாப்பில்லாமல் குவித்து

வைக்கப்பட்டுள்ள நெல் மழை நீரில் நனைந்து வருகிறது.

இதையடுத்து, நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விற்க முடியாமல் தவிக்கிறோம்

இதுகுறித்து தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி கூறியதாவது:

எங்கள் பகுதியில் பல நூறு ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குவித்து வைத்துள்ளோம். கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. அருகே உள்ள கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் இல்லை என்கின்றனர். மழை பெய்வதால் நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளது. இதனால் விளைவித்த நெல்லை விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகிறோம் என்றார்.

ஆர்வம் காட்டாத அதிகாரிகள்

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தர விமலநாதன் கூறியபோது, ‘‘குறுவைநெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டா மல் விட்டுவிட்டதால், தற்போது சாக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் தொடங்கியபோது, எவ்வளவு சாக்கு தேவைப்படும் என்பதை கணக்கிட்டு திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால் தற்போது சாக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது’’ என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர் ஏ.ராஜகோபால் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 14 லட்சம் சாக்குகள் தேவைப்படுகின்றன. தற்போது 3.5 லட்சம் சாக்குகள் கையிருப்பில் உள்ளன. இதை அனைத்து கொள்முதல் நிலையங்

களுக்கும் அனுப்பி வைத்துவருகிறோம். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டால் ஈரமாக உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x