Published : 16 Oct 2018 05:30 PM
Last Updated : 16 Oct 2018 05:30 PM
பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய கோவை அரசு கலைக்கல்லூரி மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அனுமதியின்றி கூட்டம் நடத்தியதால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கோவை அரசு கலைக்கல்லூரி எம்.ஏ. வரலாறு முதலாமாண்டு படித்து வருபவர் எஸ்.மாலதி. கோவை உக்கடம் இவரது சொந்த ஊராகும். இந்நிலையில் மாணவி எஸ்.மாலதி ஏற்பாட்டில் கடந்த செப். 28-ம் தேதி கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வரிடம் முன் அனுமதி பெற்றதாக மாணவி தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது கல்லூரி முதல்வர் கே.சித்ரா பிறப்பித்துள்ள உத்தரவில், “முதலாமாண்டு எம்.ஏ. வரலாறு படிக்கும் மாணவி எஸ்.மாலதி கடந்த செப். 28-ம் தேதி மற்ற துறைகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார். இதற்கு மாணவி அனுமதி கோரிய நிலையில், முதல்வர் அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் மாணவர்களை அழைத்து மாணவி கூட்டம் நடத்தி ஒழுங்கீனமாக நடந்துள்ளார். விசாரணை அறிக்கை பெறும் வரை 1.10.2018 முதல் மாணவி கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவி எஸ்.மாலதி கூறுகையில், “கல்லூரி வளாகத்தில் கூட்டம் நடத்தியதாக என்னை இடைநீக்கம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இடைநீக்கம் உத்தரவு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் 10 நாட்கள் கழித்துதான் என்னிடம் கொடுக்கப்பட்டது. கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடியதை குறிப்பிடவில்லை. என் மீது எந்த தவறும் இல்லை” என்றார்.
இதுகுறித்து விளக்கம் அளித்து கல்லூரி முதல்வர் கே.சித்ரா நேற்று வெளியிட்ட அறிக்கை:
“பகத்சிங் பிறந்தநாள் கொண்டாட கடந்த செப். 28-ம் தேதி அனைத்து மாணவர்களையும் அழைத்து கூட்டம் நடத்த அனுமதி கோரினார். அப்போது வகுப்பு நடந்ததால், மதியம் 12 மணிக்கு மேல் துறைத்தலைவர் அனுமதியுடன், அத்துறை மாணவர்களுடன் கூட்டம் நடத்துமாறு அனுமதிக்கப்பட்டது.
இதற்கு பதிலேதும் கூறாமல் சென்ற மாணவி, ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவர்களை கூட்டத்துக்கு அழைத்து, அன்று காலை 11 மணிக்கு 100 மாணவர்களை திரட்டி கூட்டம் நடத்தினார். அதற்கு விளக்கம் தருமாறும், அதுவரை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்வதாகவும் தபாலில் உத்தரவு நகல் அனுப்பட்டது. தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் வரும் 22-ம் தேதி நடைபெறும் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT