Published : 25 Oct 2018 07:09 PM
Last Updated : 25 Oct 2018 07:09 PM
2-ம் உலகப்போரின் போது விமானத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ராணுவத்தினரால் சென்னையில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குக் குழி சேதமடைந்ததால் அது சீரமைக்கப்பட்டது.
வடசென்னையில் காசிமேடு மீன்பிடித்துறை அருகே இருக்கும் இந்தப் பதுங்குக் குழி சமீபத்தில் பெட்ரோலிய எண்ணெய் குழாய்கள் அமைக்கும் போது சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, அந்தக் குழியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) நிறுவனம் சீரிமைத்துள்ளது.
இது குறித்து ஐஓசிஎல் தரப்பில் கூறுகையில், ''எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலைப் பகுதியில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியின் போது, இந்தப் பதுங்குக் குழியை ஒப்பந்ததாரர் சேதப்படுத்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது.
உடனடியாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு, அந்தப் பதுங்குக் குழியைச் சீரமைக்கும் பணி நடந்தது. அந்த பதுங்குக் குழி சீரமைக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு, அதைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டு யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பதுங்குக் குழி குறித்த விவரங்கள், மக்களுக்குத் தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்படும்'' எனத் தெரிவித்தனர்.
2-ம் உலகப் போரின் போது அமைக்கப்பட்ட இந்தப் பதுங்குக் குழி தற்போது சீரமைக்கப்படும் முன், இது குறித்து அறியாமல் சிலர் குப்பை கொட்டும் இடமாக வைத்திருந்தனர்.
இது குறித்து வடசென்னை மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் நிர்வாகி ஏ.டி.பி. போஸ் கூறுகையில், ''சென்னை நகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், ராயபுரம் ரயில் நிலையத்தையும் யாராவது சீரமைத்தால் மகிழ்ச்சி. ஆனால், அந்த ரயில் நிலையத்தை ரயில்வே துறை இடித்துவிட்டு, அங்கு ரயில் இன்ஜின் தயாரிப்பு நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
வரலாற்று ஆய்வாளர் வி. சிறீராம் கூறுகையில், ''இந்தப் பதுங்குக் குழிகள் முழுவதும் சிமெண்ட் கான்கிரீட்டாலும், இரும்பு பிளேட்டாலும் அமைக்கப்பட்டது. கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரே ஒரு பதுங்குக் குழி இதுவாகும். இந்தப் பதுங்குக் குழியில் இருக்கும் ஜன்னல்கள் மூலம் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.
முதல் உலகக் போர் போல் இல்லாமல் 2-ம் உலகப் போரின் போது சென்னையில் குண்டு வீசப்பட்டது. ஆனால், சென்னை நகரம் மிகுந்த பாதுகாப்பாகவே இருந்தது. விமான வழித்தாக்குதல்கள் நடக்கலாம் என்பதால், அப்போது இருந்த ஆங்கிலேய அரசு கடற்கரைப் பகுதியில் ராணுவத்தினர் விமானப்படையை எதிர்கொள்ள இந்தப் பதுங்குக் குழி அமைக்கப்பட்டது.
ஆனால், சென்னைக்கு ஒரே ஒரு போர் விமானம் மட்டுமே வந்தது என்றாலும், அதுகுண்டுவீசப்பட்டதா என்ற சான்று இல்லை. 1942-ம் ஆண்டின் போது போரின் அச்சம் காரணமாக, உயர் நீதிமன்றம் சென்னையில் இருந்து திருக்கழுகுக்குன்றத்துக்கு மாற்றப்பட்டது. உயிரியல் பூங்காவில் இருந்த விலங்குகள் சுட்டுக்கொல்லப்பட்டன.
மேலும், விமானப்படைகள் வானில் வட்டமிட்டமிடும்போது மக்களுக்கு அபாய ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யப்பட்டது. இதுதவிர ஆர்.கே.சாலை, நுங்கம்பாக்கம் பகுதியிலும் பதுங்குக் குழி இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT