Published : 03 Oct 2018 08:50 AM
Last Updated : 03 Oct 2018 08:50 AM
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வில் அதிமுக- பாஜக இடையே நீடிக்கும் திரைமறைவு அரசியல் மோதலே, மதுரையில் எய்ம்ஸ் அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
2015-ம் ஆண்டு தமிழகத்துடன் 4 மாநிலங்களுக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. மற்ற மூன்று மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி நிறைவடையும் நிலையில் தமிழகத்தில் மதுரைக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, அறிவித்தபடி வருமா அல்லது வராதா என்ற சர்ச்சை நீடிக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை, அரசாணை வெளியிடவில்லை, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, திட்ட அறிக்கை தயாராகவில்லை, நிலம் ஒப்படைக்கப்படவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மாநில அரசு நேரடியாக பதில் அளிக்காமல் பொதுவாக எய்ம்ஸ் வரும் எனக்கூறி வந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்தியஅமைச்சகம் இன்னும் ஒப்புதல்அளிக்கவில்லை, நிதி ஒதுக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை பதில் அளித்து இருந்தது.
இதைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழக அரசு பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகள், பேட்டிகள் கொடுக்கும் அளவுக்கு எய்ம்ஸ் விவகாரம் பொரிதாக மாறியது.
ஆனால், தமிழக சுகாதாரத் துறைமுதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தஅறிக்கை மத்திய அமைச்சகம் மற்றும் செலவின நிதிக் குழு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு
இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் னிவாசன் கூறியதாவது:
மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதால் மத்திய அரசு அந்த வழக்கில் தகுதி அடிப்படையில் மதுரையில் எய்ம்ஸ் அமைய உள்ளதாக அறிவித்து 5 நிபந்தனைகளை விதித்தது.
ஆனால், இந்த நிபந்தனைகளை நிறைவேற்றி திட்ட அறிக்கை அனுப்பி, நிதி ஒதுக்கீடு பெற தமிழக சுகாதாரத் துறை விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை.
எய்ம்ஸ் திட்டம் மத்திய அரசு திட்டம் என்றாலும், அதை விரைந்து நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுக்குத்தான் அதிகமாக உள்ளது. தமிழக சுகாதாரத்துறை தாமதம் செய்வதைப் பார்க்கும்போது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது. இதை நாங்கள்பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகிறோம் என்றார்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, ‘‘எய்ம்ஸ் மதுரையில் அமைவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்குள்ளாகவே தேவையில்லாமல் வீண் வதந்திகளை கிளப்புகிறார்கள். மத்திய அரசு சொல்லிய 5 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களை தயார் செய்துவிட்டோம். விரைவில் அதுவும் முடிந்துவிடும்’’ என்றார்.
திட்ட மதிப்பீடு அதிகமாகும்
மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறும்போது, “மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதாக மத்திய அரசு அறிவித்து 100 நாட்களைக் கடந்தும் தற்போது வரை அதன் நிலை என்ன என்பதே தெரியவில்லை. 2015-ல் எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு ரூ.1,200 கோடியாக இருக்கும் என்றார்கள். தற்போது 100 நாளுக்கு முன் அறிவித்தபோது ரூ.1,500 கோடி என்றார்கள். தற்போது ரூ.2000 கோடி என்கிறார்கள். இப்படியே குறித்த நேரத்தில் திட்டத்தை ஆரம்பிக்காமல் இழுத்துக் கொண்டே சென்றால் திட்ட மதிப்பீடு அதிகமாகி அரசு பணம்தான் விரயமாகும்’’ என்றார்.
மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள 200 ஏக்கர் நிலம் தமிழக சுகாதாரத் துறைக்குச் சொந்தமானது. இந்த இடத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை வரும் 9-ம் தேதி டெல்லி சென்று சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT