Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

சென்னையில் விவசாயிகள் மாளிகை: பேரவையில் மார்க்சிஸ்ட் கோரிக்கை

‘‘தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் தங்குவதற்கு, சென்னையில் விவசாயிகள் மாளிகை அமைக்கப்பட வேண்டும்’’ என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பேரவையில் வியாழக் கிழமை நடைபெற்ற வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் விவரம் வருமாறு:

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு விவசாயிகள் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு இங்கு இடவசதி இல்லை. மற்ற மாநிலங்களில், தலைநகரங்களுக்கு வரும் விவசாயிகள் தங்க ‘கிசான் பவன்’ அமைக்கப்பட்டுள்ளதைப் போல் சென்னையிலும் ‘விவசாயிகள் மாளிகை’ அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்): வேளாண் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அத்துறைக்கு தனி பட்ஜெட் போட்டு நாட்டிலேயே தமிழக அரசு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். மானாவாரி விவசாயிகளுக்குச் சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி: மானாவாரி விவசாயிகளுக்குச் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு மடங்கு உற்பத்திப் பெருக்கம், 3 மடங்கு வருமானம் அதிகரிப்பு என பயிரிடும் பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

குணசேகரன்: இங்கு நெல், கரும்புக்கு மட்டும் ஆதார விலை தரப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ளது போல் அனைத்துப் பயிர்களுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். மரம் வளர்ப்போருக்கு மானியம் தர வேண்டும்.

அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்: தமிழகத்தில் ஆண்டுக்கு 66 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. தேவைப்படுவோர் கேட்டால் மரக்கன்றுகள் வழங்கப்படும்.

குணசேகரன்: மரங்களை வளர்க்க முன்வருவோருக்கு மானியம் தந்து ஊக்குவிக்க வேண்டும் என்றுதான் கேட்டேன். வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்தது போல், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்படும் குண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தால், இத்தொழிலை நம்பி வாழும் விவசாயிகள் வாழ்வு செழிக்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x