Published : 30 Oct 2018 09:17 AM
Last Updated : 30 Oct 2018 09:17 AM

நோயுற்ற முதியோரும் நம் குடும்ப உறுப்பினர்தானே?-  அதிக சத்தமுள்ள பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம்

வங்கக் கடலில் உருவாகும் புயல் போல தித்திக்கும் தீபாவளி நம்மை வேகமாக நெருங்கி வருகிறது. அதனால் பெரும்பாலான வீடுகளில் தீபாவளி பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எல்லா வீடுகளிலும் இப்போது தீபாவளியை பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பல வீடுகளில் பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கும் முனைப்பில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்கள், குழந்தைகளின் ஆசையை பூர்த்தி செய்ய, எந்த துணிக் கடையில் குறைந்த விலையில், அதிக டிசைன்கள் வந்துள்ளன, எந்த பட்டாசுக் கடையில் புதிய ரக பட்டாசுகள் வர இருக்கின்றன என நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

பட்டாசு இல்லாத தீபாவளியை நம்மால் நினைத் துக் கூட பார்க்க முடியாது. தீபாவளி என்றாலே குழந்தைகளுக்கு பட்டாசுதான் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற நம் முன்னோர்கள் கூற்றையும் நாம் மறந்துவிடக்கூடாது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு மக்கள்தொகை இல்லை. நகர்மயம் இல்லை. வசிப்பிடங்களில் நெருக்கம் இல்லை. வாழ்க்கை முறை மாற்றத்தால் தொற்றல்லாத நோய்களான இதயநோய், நீரிழிவு, வாதநோய், ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக இல்லை. அப்போது வெடிச் சத்தத்தின் அளவு குறைவாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். நகர்மயம் என்ற பெயரில் எழுப்பப்பட்ட வானுயர்ந்த கட்டிடங்கள், நெருக்க மான வீடுகளால், சிறு ஒலியும் பிரதிபலித்து அதிக ஒலியாக வெளிப்படுகின்றன. அனைத்து வீடுகளிலும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோர் வசிக்கின்றனர்.

நாம் பட்டாசு வெடிப்பதன் மூலம் பெருத்த மகிழ்ச்சியை உணரும் அதே வேளையில், அந்த மிகை ஒலியால், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுதொடர்பாக மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் ஒலி 125 டெசிபலுக்கு கீழ் இருக்க வேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரையறை செய்துள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் எழும் அதிக ஒலி, தற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசையானது நிரந்தரமான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு பாதிப்புகள் மேலும் அதிகமாக இருக்கும். அதனால் அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வகைகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

விழாக்கால மகிழ்ச்சி என்பது நம் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரிவினருக்கு மட்டும் என நாம் நினைக்கிறோம். அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதுதான் உண்மையான பண்டிகையாக இருக்கும். வயது முதிர்ந்தவர்களும் நம் குடும்ப உறுப்பினர்கள்தான். அவர்களும் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ உரிமை இருக்கிறது. நாம் வெடிக்கும் பட்டாசுகள் ஏற்படுத்தும் மிகை ஒலி அவர்களை துன்புறுத்துகிறது என்பதை நாம் உணர வேண்டும். இந்த தீபாவளியில் முதியோர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் குறைந்த ஒலியை எழுப்பும் பட்டாசுகளை மட்டுமே வெடிப்போம் என்று நாம் உறுதியேற்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x