Published : 25 Oct 2018 08:11 PM
Last Updated : 25 Oct 2018 08:11 PM
உலகம் முழுவதும் மீ டூ இயக்கம் பெரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மீ டூ புகார்கள் பிரபலங்கள் மீது எழுந்தவண்ணம் உள்ளன.
ஆனால், சற்றும் எதிர்பாராவிதமாக கர்நாடக இசை உலகில் மீ டூ தற்போது புயலைக் கிளப்பியுள்ளது. மெட்ராஸ் மியூசிக் அகாடமி சித்ரவீணா என்.ரவிகிரண் உட்பட 7 கிளாசிக்கல் இசைக் கலைஞர்களை இந்த ஆண்டு டிசம்பர் சங்கீத சீசனுக்குத் தடை செய்துள்ளது, காரணம் மீ டூ.
ரவிகிரண், இவர் சங்கீத கலாநிதி விருது பெற்றவர். வாய்ப்பாட்டு கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.தியாகராஜன், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம், மிருதங்க வாத்திய இசைக்கலைஞர்களான மன்னார்குடி ஏ.ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் மீ டூ புகார் அடிப்படையில் இந்த டிசம்பர் சீசனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி கூறியதாவது:
''நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கு நாம் பாராமுகமாக இருக்க முடியாது. இத்தனையாண்டு காலமாக பாலியல் துன்புறுத்தல் அனுபவித்து வரும் பெண்களுக்கு மீ டூ இயக்கம் ஒரு வெளிப்பாட்டு வடிவமாக உள்ளது. இவர்கள் தங்களது துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள இப்போது முடிகிறது.
இருந்தாலும் மியூசிக் அகாடமி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதை அணுகாமல் மிகவும் நுட்பமாக அணுகுகிறது. வெறுமனே ஒருவர் பெயர் குறிப்பிடப்பட்டது என்பது மட்டுமே அகாடமியின் நடவடிக்கைக்குக் காரணமல்ல. மறுப்புகள் வரும் என்பதால் மிகவும் புறவயமான, பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கையாள்கிறோம்.
இதில் அம்பலமான விஷயம் விரிவானது. விரிவான விளக்கங்கள் உள்ளது, அதாவது பாலியல் துன்புறுத்தல் என்று கூறப்படும் ஒன்று பெரும்பாலும் உடல் ரீதியானதாக உள்ளது. பொதுவாக ஒரு சம்பவத்துக்கு மேல் நடந்தால்தான் வெளியே வரும். புகார் கூறப்பட்ட குறிப்பிட்ட சம்பவம் மிகவும் சீரியசானது. புகார்கள், குற்றச்சாட்டுகள் எழுந்த போது இதே துறையில் இருக்கும் பாரபட்சமற்ற சில மனிதர்களைச் சந்தித்துப் பேசி புகார்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்.
பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக அகாடமி எப்போதும் இருக்க விரும்புகிறது. ஆனாலும் இவையெல்லாம் குற்றச்சாட்டுகளே, நாங்கள் அவர்களை குற்றவாளிகளாகக் கருதவில்லை. இந்தப் புகாரின் அடிப்படையில் இந்த சீசனில் யாரை கச்சேரிக்கு அழைப்பது அல்லது அழைக்கக் கூடாது என்பதில் நாங்கள் எங்கள் உரிமையையே நடைமுறைப்படுத்தியுள்ளோம். மியூசிக் அகாடமியின் நம்பகத்தன்மையையும் கவுரவத்தையும் காப்பாற்ற வேண்டியே இந்த நடவடிக்கை. இது 90 ஆண்டுகால பழமை வாய்ந்த அமைப்பாகும்.
இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்க வேண்டும். மற்ற இசை அமைப்புகளும் எங்கள் வழியை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று நம்புகிறேன்'' என்கிறார் முரளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT