Published : 25 Oct 2018 09:53 AM
Last Updated : 25 Oct 2018 09:53 AM
மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் வானியல் அறிவியல் நிகழ்வுகளை கற்றுத் தரும் அறிவியல் மையமாக மாறியுள்ளது.மதுரையில் ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மன்னரால் உருவாக்கப்பட்டது, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம். நான்கு புறமும் சுமார் 15 அடி உயரத்துக்கு கருங்கற்களால் கட்டப்பட்ட பலமான சுவர்.
குளத்தைச் சுற்றிலும் விசாலமான நடை மேடை என பழங்கால கட்டிடக் கலைக்குச் சான்றாக தற்போதும் பொலிவு குன்றாமல் தெப்பக்குளம் காணப்படுகிறது. மாலை நேரங்களில் சுவர்களில் அமர்ந்தபடி தெப்பக்குளத்தை ரசிக்கவும், காற்று வாங்கவும், நடை பயிற்சிக்கும் ஆயிரக்கணக்கானோர் தினமும் இங்கு வருகிறார்கள்.விடுமுறை நாட்களில் சென்னை மெரீனா கடற்கரைப்போல பெருங்கூட்டம் இங்கு கூடி விடுகிறது. குழந்தைகளை கவர பல்வேறு விதமான விளையாட்டு சாதனங்கள், தின்பண்டங்கள் என திருவிழாப்போல காணப்படும்.
இந்த தெப்பக்குளம், சமீபத்தில் கலிலியோ அறிவியல் மையத்தினரால், பள்ளிக் குழந்தைகளுக்கு வானியல் நிகழ்வுகளை எளிமையாக கற்பிக்கும் அறிவியல் களமாக மாறி உள்ளது. 2015-ம் ஆண்டு முதல் இந்த தெப்பக்குளத்தின் கரையில் ஒவ்வொரு ஆண்டும் நிலவு நோக்கு வானியல் நிகழ்வு, சந்திர கிரகணம், சூரிய கிரகணம், நிழல் இல்லா நாள் மற்றும் கோள்கள் பூமிக்கு அருகில் வரும்போதும் அதை தொலைநோக்கி வாயிலாக குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் காட்டி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாக வானியல் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை இந்த தெப்பக்குளத்தின் மேற்குப் பகுதியில் கலிலியோ அறிவியல் மையக் குழுவினர் நடத்திய சர்வதேச நிலவு நோக்கு நாளில் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் நிலவை பார்க்க திரண்டனர்.அவர்கள் சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் நிலவின் மேல்பகுதி மற்றும் மேடு, பள்ளங்கள், மலைகளை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தெப்பக்குளம் பகுதிஎந்தவித தொந்தரவும் இல்லாத வெட்டவெளியாக இருப்பதால் இப்பகுதியை வானியலை ஆராயத் தேர்வு செய்ததாக கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் அ. சத்யமாணிக்கம் தெரிவித்தார்.
அவரிடம் பேசியபோது, ‘‘மதுரையை மையமாகக் கொண்டுதமிழகத்தின் பிற மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்குச் சென்று இதுபோன்ற வானியல் நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். கல்லூரிகள், அரசு பள்ளிகளுக்குச் சென்றுகற்பிக்கும்போது, மாணவர்களுக்கு இயல்பாகவே வானியலில் ஆர்வம் பிறக்கிறது.நிலவை ஆராய சந்திராயன்-1 செயற்கைக்கோளை ஏற்கெனவே இஸ்ரோ அனுப்பியது. சந்திராயன்-2-ஐ வருகிற ஜனவரியில் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.சந்திராயன்-1 செயற்கைக்கோள் உருவாக்கத்தில் பணிபுரிந்த ஆயிரம் விஞ்ஞானிகளில் 400 பேர் பெண்கள். அதில், 200 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையைத் தவிர மற்ற யாரையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை.வானியல் அறிவியலில் இந்தியா வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஒரே நாளில் 104 செயற்கைக்கோள்களை அனுப்பி உள்ளோம். ஆயிரக்கணக்கான பெண் விஞ்ஞானிகள் இஸ்ரோவில் பணிபுரிகின்றனர்.அரசு சார்பில் எங்களுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை. தெரிந்தவர்கள், நண்பர்கள், பேராசிரியர்கள் உதவியால் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அரசு தரப்பில் எங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். புதிய தொழில்நுட்பம் வரும்போது சொல்லித் தருவர். எங்களிடம் 6 தொலைநோக்கிகள் உள்ளன. பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வரும்போது அதை காட்டுகிறோம்.
செவ்வாய் போன்ற கோள்கள் நீள் வட்டப்பாதையில் செல்லும்போது பூமிக்கு அருகே வரும். அல்லது 4 கோள்கள், 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது குழந்தைகளை பார்க்க வைத்து விளக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT