Published : 23 Oct 2018 09:24 AM
Last Updated : 23 Oct 2018 09:24 AM

சென்னையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்: கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பதில் பணியாளர்கள் அலட்சியம்; மாநகராட்சி குறைதீர் வசதிகளில் புகார் செய்வோருக்கு மிரட்டல்

சென்னையில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பதில் பணி யாளர்கள் அலட்சியம் காட்டுவதால் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரின் குழந்தைகள் தக்சன், தீக்சா ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதற்கு சென்னை மாநகராட்சியின் அலட்சியமும், முறையான வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்காததும், கண்காணிப்பு இல்லாததும்தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொசு உற்பத்தி ஆதாரங்கள்

உலக சுகாதார நிறுவன வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முதலில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க வேண்டும். அதன் பிறகு, நிலைமையின் தீவிரம் அறிந்து தேவைப்பட்டால் புகை மற்றும் தெளிப்பு மருந்துகளை அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கொடுங்கை யூரைச் சேர்ந்த புகார்தாரர் ஒருவர் கூறியதாவது:

எனது வீட்டைச் சுற்றி கொசுக் கள் அதிகமாக இருந்தன. எங்கள் வீட்டில் ஆஸ்துமா நோயாளி இருப்பதால், ‘நம்ம சென்னை’ செயலியில், கொசுத் தொல்லையைத் தடுக்க வேண்டும் என்றும், புகை மற்றும் தெளிப்பு மருந்தை அடிக்காதீர்கள் என்றும் தெரிவித்திருந்தேன்.

ஆனால், களப் பணியாளர்கள் புகை மற்றும் தெளிப்பு மருந்து கருவிகளுடன் வந்து நிற்கின்றனர். ஆனாலும் கொசுக்கள் ஒழியவில்லை. அதைத் தொடர்ந்து களப் பணியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், வீட்டின் அருகில் மாநகராட்சி பூங்காவில் செயல்படாமல் இருந்த செயற்கை நீரூற்று, பக்கத்து வீட்டில் மூடப்படாமல் இருந்த கிணறு, உடைந்த கழிவறை பேசின், சில வீடுகளின் அருகில் ஐஸ்கிரீம் கப்புகள் ஆகியவற்றை, கொசுப் புழுக்களுடன் கண்டுபிடித்து அழித்தனர்.

இப்பகுதிக்கு வாரந்தோறும் களப் பணியாளர்கள் வருகின்றனர். பொதுமக்களிடமும் கையெழுத்து பெறுகின்றனர். ஆனால் கொசு உற்பத்தி ஆதாரங்களைக் கண்டு பிடிப்பதில்லை. அதை உயரதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. அதனால்தான் சென்னையில் டெங்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது என்றார்.

புகார்தாரர்களுக்கு மிரட்டல்

மற்றொரு புகார்தாரர் கூறியதாவது: கொசுத் தொல்லை தொடர்பாக யாரேனும், மாநகராட்சியின் புகார் தொலைபேசி எண் ‘1913’, ‘நம்ம சென்னை’ செயலியில் புகார் தெரிவித்தால், “எங்கு புகார் தெரிவித்தாலும் நாங்கள்தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் எங்களிடம்தான் புகார் அளிக்க வேண்டும்” என்று பூச்சியியல் வல்லுநர்கள் உள்ளிட்ட கள அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

பொதுமக்கள், கள அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கும்போது அது மாநகராட்சி தலைமையின் கவனத்துக்கு வருவதில்லை. மாநகராட்சி தலைமையும் கொசுத் தொல்லை குறித்து புகார்கள் குறைந்ததாக நம்புகிறது. அதே நேரத்தில் ‘1913’, ‘நம்ம சென்னை’ ஆகியவற்றில் புகார் தெரிவிக்கும் போது, அந்த விவரங்கள் தொகுக்கப்பட்டு, மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பப்படுகிறது.

புகார் அதிகம் வந்த பகுதி குறித்து ஆணையர் கேள்வி எழுப்புவார். இதைத் தவிர்ப்பதற்காகவே, மாநகராட்சி புகார் சேவைகளில் புகார் அளிக்க வேண்டாம் என்று கள அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

அவர்களிடம் புகார் அளித்தால், தெளிப்பு மருந்து மட்டும் தான் அடிக்கின்றனர். சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகரித் திருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என்றார்.

பூச்சியியல் வல்லுநர்கள் உள்ளிட்ட கள அதிகாரிகள் சிலர் கூறும்போது, “கொசுவை ஒழிக்க முடியாது. பொதுமக்கள்தான் ஜன்னல் உள்ளிட்டவற்றுக்கு வலைகள் அடித்து பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு புகார் வந்தால் புகை மருந்து மட்டும்தான் அடிப்போம். மேலதிகாரிகளுக்கு ஆதாரமாக புகைப் படம் எடுத்து அனுப்ப அதுதான் வசதியாகவும், நம்பும்படியாகவும் உள்ளது.

பொதுமக்களை திருப்திபடுத்துதல்

சில ஐஏஎஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து, சென்னையில் அண்மைக் காலமாக கொசுப் புகை மருந்தையே பார்க்க முடியவில்லையே என்கின்றனர். அவர்களை திருப்திபடுத்தவும் புகை மருந்தைத்தான் அடிக்க வேண்டியுள்ளது” என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு வோரைக் குறைப்பது, உயிரிழப் பைத் தடுப்பது ஆகிய இரு இலக்குகளை நிர்ணயித்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி முழுவதும் தற்போது மலேரியா பணியாளர்கள் மட்டுமல்லாது, சாலை, பூங்கா உள்ளிட்ட அனைத் துத் துறை பணியாளர்களும் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வீடுகளிலும் கொசு உற்பத்தி ஆதாரங்கள் உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட வீட்டைச் சுற்றியுள்ள 500 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், திரை யரங்கங்கள், வணிக வளாகங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக பல வார்டுகளில் டெங்குக் காய்ச்சலே இல்லை. சில வார்டுகளில் ஓரிருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநகராட்சி நடவடிக்கையால், டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x