Last Updated : 31 Oct, 2018 04:31 PM

 

Published : 31 Oct 2018 04:31 PM
Last Updated : 31 Oct 2018 04:31 PM

தீபாவளியையொட்டி புதுச்சேரியில் இலவச அரிசி, சர்க்கரைக்குப் பதிலாக 1000 ரூபாய் ரொக்கம்: அமைச்சர் கந்தசாமி

காங்கிரஸ், திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து இலவச அரிசி, சர்க்கரை, துணிக்குப் பதிலாக ரொக்கம், தீபாவளியொட்டி அவரவர் வங்கி கணக்கில் 1000 ரூபாய் ரொக்கப் பணம் செலுத்தப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பல மாதங்களாக ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வழக்கமாக தீபாவளியையொட்டி இலவச சர்க்கரையும் தரப்படவில்லை. ஆளுநர் கிரண்பேடிக்கும், அரசுக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபமெடுத்துள்ளது. இதனால் பல நலத்திட்டங்களும் செயல்பாட்டில் இல்லை. இதனால் மக்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தபோது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தராதது தொடர்பாக கேள்வி எழுப்பி ஆளுங்கட்சியான காங்கிரஸ், கூட்டணி கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் கூட்டாக தர்ணாவில் ஈடுபட்டனர். தீபாவளியையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் செலுத்தவும் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்து முடிவு எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி நலத்துறை அமைச்சர் கந்தசாமி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “வரும் தீபாவளியை முன்னிட்டு சிவப்பு குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச துணிக்குப் பதிலாக தலா ரூ.ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தரப்படும்.

ஆதி திராவிடர் இன 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச துணிக்குப் பதிலாக ஒவ்வொரு நபருக்கும் தலா 500 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச துணிக்குப் பதிலாக நபர் ஒருவருக்கு தலா 500 ரூபாயும் தரப்படும்.

குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலமாக வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் சர்க்கரைக்குப் பதிலாக சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரத்து 275 ரூபாயும், மஞ்சள் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 675 ரூபாயும் தரப்படும். இவை அனைத்தும் அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x