Last Updated : 26 Oct, 2018 09:56 PM

 

Published : 26 Oct 2018 09:56 PM
Last Updated : 26 Oct 2018 09:56 PM

புகைப்படக்கலைஞர்களின் தீபாவளி விழா: நெகிழ்ந்துப்போன சுகாதாரத்துறை செயலர்

சென்னையில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் நடத்தும் தீபாவளி விழாவில் ஏழைப் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவி செய்ததைக்கண்டு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நெகிழ்ந்துப்போய் வாழ்த்தினார்.

பத்திரிகைகளில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை தங்கள் லென்ஸ் கண்களால் வெளிச்சம் போட்டு காட்டுவதை அனைவரும் அறிவர். பல செய்திகள் சொல்லாததை ஒரு புகைப்படம் மூலம் செய்தித்தாள்களில் பதிவு செய்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புகைப்படக்கலைஞர்கள் ஆண்டுதோறும் சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் அமைப்பானது ஒன்று சேர்ந்து தங்களின் உழைப்பில் சிறிய பங்கை சேர்த்து தீபாவளி திருநாளை கொண்டாடுகிறார்கள். தீபாவளி திருநாள் என்றால் பட்டாசு வெடிப்பதல்ல. தங்களுக்குள் சேர்த்த தொகையை சென்னையில் உள்ள ஏழை எளிய மாணவர்களை சந்தோஷப்படுத்தும்வண்ணம் உடைகள், பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்தி வருகின்றனர்.

இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் இந்த உதவி நடந்து வருகிறது. இதற்கு வெளியிலிருந்தும் சில நல்ல உள்ளங்கள் உதவுகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி விழாவை சென்னையில் உள்ள வடசென்னை புளியந்தோப்பு டிகோஸ்டர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.

இந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள் பெரும்பாலோர் ஆதரவற்றவர்கள் அல்லது மிகவும் வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் படித்துவருகின்றனர்.

இவர்களுக்கு தீபாவளிக்கான உடைகள் மற்றும் உட்கார்ந்து படிக்க வண்ணமயமான சிறு பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், எவர்வின் தனியார் பள்ளி தாளாளர் புருசோத்தமன் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் நான் கடுமையான பணிச்சூழல் இடையே புகைப்படக் கலைஞர்கள் அழைப்பைத்தட்ட முடியாமல் கலந்துக்கொண்டேன். இங்குள்ள குழந்தைகளுக்கு பட்டாசுகளை இவர்கள் வழங்கியிருந்தால் சாதாரண விழாவாக இதைப்பார்த்திருப்பேன்.

ஆனால் இவர்கள் உடுத்திக்கொள்ள துணி, சீருடை, பயன்படுத்தும் நாற்காலி போன்றவற்றை வழங்கியதைப்பார்த்து நெகிழ்ந்துப்போனேன். இந்த விழாவில் கலந்துக்கொண்டதும் இந்த குழந்தைகளை பார்ப்பதும் மகிழ்ச்சியைத்தருகிறது. பெரிய பெரிய விழாக்கள் கொடுக்காத சந்தோஷத்தை இந்த எளிய விழா கொடுத்துள்ளது.

பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் தாங்கள் எடுக்கும் படங்களின் மூலம் மற்றவர்களை எப்போதுமே சந்தோஷப்படுத்திக் கொண்டு இருப்பார்கள் இப்போது தீபாவளி துணிகளை எளிய மாணவர்களுக்கு கொடுத்தும் சந்தோஷப்படுகின்றனர் .இந்த பள்ளியை இந்த மாணவர்களை தேர்ந்து எடுத்ததன் மூலமாகவே அவர்களது ஈரமான இதயத்தை உணர முடிகிறது தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள் என்று பேசினார்.

விழாவில் கலந்துக்கொண்ட பிஞ்சுக்குழந்தைகள் சுகாதாரத்துறை செயலருடன் சந்தோஷமாக படம் எடுத்துக்கொண்டனர். ஊடகப்பணி சமுதாயப்பணி என்கிற சமுதாய அக்கறையை ஆண்டுதோறும் புகைப்படக்கலைஞர்கள் ஏழைப்பிள்ளைகளுக்கு உதவுவதன் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x