Last Updated : 11 Oct, 2018 07:05 PM

 

Published : 11 Oct 2018 07:05 PM
Last Updated : 11 Oct 2018 07:05 PM

அரசு சரியாக செயல்படுகிறதா? புதுச்சேரி ஆளுநரிடம் கேள்வி கேட்ட மாணவன்

அரசு சரியாக செயல்படுகிறதா என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியிடம் கல்லூரி மாணவன் கேள்வி எழுப்பியதால் அதிகாரிகள் பதறி, கேள்வியை மாற்றி கேட்கக் கூறினர். அதையடுத்து முதல்வர் நாராயணசாமி பதில் தந்தார்.

புதுச்சேரி அரசின் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "புதுவையில் உள்ள பல துறைகளில் பெண்கள் உயர் பதவியில் உள்ளனர். இந்த விழிப்புணர்வு வடநாட்டில் இருக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெண்கள் தங்களது தலையில் துணியைப் போர்த்திக் கொண்டுதான் வெளியில் வர வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக உள்ளன. கடுமையான சட்டம் இருந்தாலும் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.

அதையடுத்து ஆளுநர் கிரண்பேடி பேசுகையில், "கடின உழைப்பு, சுய ஒழுக்கம் இளையோரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். பல இளையோர் கடின உழைப்பு, ஒழுக்கம் இல்லாமல் உயர வேண்டும் என நினைக்கின்றனர். கல்விக் கடன் பெற்ற பல மாணவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் மற்ற மாணவர்களுக்கு கல்விக் கடன் தர முடியவில்லை. வேலை கிடைத்தும் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. சுய ஒழுக்கம் இல்லாததால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. நமக்கு நாமே உண்மையாக இருந்தால் இந்த நிலை ஏற்படாது. பணம் முக்கியம் கிடையாது" என்று குறிப்பிட்டார்.

அதையடுத்து பங்கேற்ற மாணவ, மாணவியர் கலந்துரையாடல் தொடங்கிய நிலையில் தாகூர் கல்லூரி மாணவர் தினேஷ், "அரசு சரியாக இயங்குகிறதா?" என்று ஆளுநரிடம் கேள்வி எழுப்பியவுடன் அரங்கிலிருந்த அதிகாரிகள் பதறினர். அதையடுத்து பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக கேள்வி கேட்க அறிவுறுத்தினர். அதையடுத்து மகளிருக்கு திட்டங்கள் செயல்படுத்துவதில் அரசு சரியாகச் செய்கிறதா என மாற்றிக் கேள்வி கேட்டார். அதையடுத்து ஆளுநர் கிரண்பேடி புறப்பட தயாராக, முதல்வர் எழுந்து மகளிர் திட்டங்கள் தொடர்பாக விளக்கிப் பதிலளித்தார். அதையடுத்து முதல்வரிடம் கூறி விட்டு ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x