Published : 02 Oct 2018 12:42 PM
Last Updated : 02 Oct 2018 12:42 PM
இதுவரை தனக்கு எந்த நோட்டீஸூம் வரவில்லை. அப்படி வந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர், மற்றும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகிய 4 பேரையும் ஏன் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு, அவர்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கருணாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி ஐ.பிரபு, அறந்தாங்கி ரத்தினசாபாபதி ஆகிய 4 பேரும் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள். இந்த நிலையில் மேற்கண்ட 4 பேரும், அதிமுக அரசை விமர்சித்துப் பேசி வருவதாகவும், இது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதிமுக தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து ஆலோசித்த பின்னர், அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன் மூலமாக 4 பேர் மீதும், சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்துள்ளனராம்.
இதையடுத்து சட்டப்பேரவைத் தலைவர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அழைத்து ஆலோசனை நடத்தியதாகவும், அதைத்தொடர்ந்தே கருணாஸ், டிடிவி தினகரன் அணியில் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கும் அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் ரத்தின சபாபதி, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் விருதாச்சலம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன், தொழில் நுட்பப்பிரிவு அணி செயலாளரும், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான பிரபு ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏவான கள்ளக்குறிச்சி பிரபுவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ''இதுவரை தனக்கு எந்த நோட்டீஸூம் வரவில்லை. அப்படி வந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்வேன். மேலும் நான் அதிமுக உறுப்பினராக உள்ள நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறேன் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. இந்த ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் எண்ணம் எப்படி என்பது அனைவருக்கும் தெரிந்ததே'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT